உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கின்ற தேர்தல் பிரசாரங்களுடன், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் தங்களுக்குள் பிணை முறி விவகாரத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் முக்கிய பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையே ஏற்பட்டுள்ள குற்றம் சுமத்துகின்ற சொற்போரானது நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பு குறித்து அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது.
இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து அமைத்ததே ஆட்சி அதிகாரத்தில் உள்ள நல்லாட்சி அரசாங்கமாகும். அதிகாரத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்காக செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி முற்றுப்பெற்றுவிட்டது. முடிவுக்கு வந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆயினும், 2020 ஆம் ஆண்டு வரையில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியை நடத்துவது என்று தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே பிணைமுறி விவகாரத்தில் ஊழல் மோசடி செயல்களில் ஈடுபட்டவர்கள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்தே இரு கட்சிகளுக்குமிடையிலான இந்த முறுகல் நிலை தலைதூக்கியது.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணை முறி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை பாரிய அளவிலான நிதிமோசடி இடம்பெற்றுள்ளது என தெரிவி-த்திருக்கின்றது. அத்துடன் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் என பலருடைய பெயர்களும்கூட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு நாட்டு மக்களுடைய பணத்தில் நிதிமோசடியில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கடுந்தொனியில் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்துழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக பிணை முறி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் மீது சொற்கணைகளை ஏவியிருந்தனர். அதனால் உணர்ச்சி வசப்பட்ட ஜனாதிபதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசுவாசப்படுத்தி அமைதியடையச் செய்துள்ளார். பிணைமுறி விடயமே பாராளுமன்றத்தை சமர்க்களமாக்கியிருந்தது.
மறுபக்கத்தில் ஆட்சி அதிகாரத்தை எந்த வகையிலாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் ஊடாக விடுதலைப்புலிகளின் நாட்டைப் பிரிக்கின்ற கைங்கரியத்திற்கு அரசாங்கம் துணைபோயிருப்பதாகப் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பிரிவினைவாத ரீதியில் நாட்டை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு அரச தரப்பினர் முயன்று வருகின்றார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் இனவாத நோக்கில் பிழையான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் பொல்லாத அரசாங்கமாக உருவகித்துக் காட்டுவதற்கு பிணைமுறி விவகாரம் அவருக்கும் பொது எதிரணியினருக்கும் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
அரச தரப்பினரும் சளைக்கவில்லை. அவருக்குப் பதிலடியாகப் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தி பிரசாரங்கள் மூலமாக அவரையும் அவருடைய தலைமையிலான குழுவினரையும் கடுமையாக சாடி வருகின்றனர்.
பிணைமுறி சொற்போரும் பாராளுமன்ற சர்ச்சையும் இருந்த நிலையிலேயே, இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் பதவியில் தொடர்ந்து இருக்குமா என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகியிருக்கின்றன.
கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை பற்றிய ஒரு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிராணி விஜேவிக்கிரம மற்றும் பியசேன கமகே ஆகியோர் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த நிர்ணயம் மீறப்பட்டிருக்கின்றது என்றும், இதனால் அரசியலமைப்பின் 46 ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது என்றும் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி, அதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்று சபாநாயகரை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேநேரம் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ள நிலையில் அமைச்சரவை தொடர்ந்து இயங்கி வருவது அரசியலமைப்புக்கு முரணானது அல்லவா என தினேஷ் குணவர்தன வினவியிருந்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கேட்டிருந்தார். அப்போது குறுக்கிட்டுப் பதிலளித்த அமைச்சர் லக் ்ஷ்மன் கிரியெல்ல, இது கூட்டு அரசின் பிரச்சினை. எதிரணி தலையிட வேண்டியதில்லை என அதிரடியாகப் பதிலளித்தார்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க விடவில்லை. இது கூட்டு அரசின் பிரச்சினை மட்டுமல்ல. நாட்டு மக்களுடைய பிரச்சினை. என்ன நடக்கின்றது என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும். இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா, இல்லையா? அவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அதன் நகலொன்று சபாநாயகருக்குக் கிடைத்திருக்க வேண்டும். அவ்வாறான நகல் கிடைத்ததா என சபாநாயகரிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அத்தகைய நகல் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவுமில்லை என தெரிவித்தார்.
கூட்டு அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கப்படுமா என்ற நிதியொதுக்கீடு சம்பந்தமான தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய இதற்கு பிரதமரே பதிலளிப்பார் எனக்கூறினார்.
அரசாங்கத்தின் இருப்பு குறித்தும், அமைச்சரவையின் நிலைமை, அமைச்சர்களுக்கான நிதியொதுக்கீடு பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டதையடுத்து, பாராளுமன்றத்தில் அரசியல் ரீதியானதொரு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
எதிரணியினரைப் போல பிணைமுறி விவகாரத்தில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வார்த்தை மோதலும், அரசாங்கத்தின் இருப்பு குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சர்ச்சைகளும், பரபரப்பான சூழலும் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் இருப்பு குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது.
தமிழ் அரசியல் அரங்கில் நடக்கவிருப்பது என்னவோ உள்ளூராட்சித் தேர்தலாக இருந்தாலும், தேசிய மட்டத்திலான விடயங்களைப் பேசு பொருளாக்கி எதிர்த்தரப்பினரை முடிந்த அளவில் தரம் தாழ்த்திக் காட்டத்தக்க வகையிலான பிரசாரங்களே தேசிய அளவில் இடம்பெற்று வருகின்றன. வடகிழக்கில் வீட்டுச் சின்னத்தைத் தேர்தல் சின்னமாகக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், உதயசூரியனைத் தேர்தல் சின்னமாகக் கொண்ட தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கும் இடையிலான பிரசாரப் போரும் தேசிய அரசியல் கட்சிகளின் பாணியிலேயே காணப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர், தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் தமிழ்த்தேசிய முன்னணியையும் ஏனைய சிவில் அமைப்புக்கள், பொதுஅமைப்புக்களை உள்ளடக்கியதாக மாற்று அணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
ஆயினும் அந்த முயற்சி கைகூடவில்லை. மாறாக, அந்தக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் கூட்டு அமைத்து, உதயசூரியன் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து இறுக்கமாக அதனைக் கட்டியெழுப்பத் தவறியது, அந்தக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் ஜனநாயக ரீதியில் முடிவுகளை மேற்கொண்டு செயற்படத் தவறியதுடன், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சியை மக்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்காக தன்னிச்சையாகச் செயற்படுவது போன்ற விடயங்களில் அதிருப்தியை வெளியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது.
கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளிக்கட்சிகளாகிய ரெலோ மற்றும் புளொட் ஆகியன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாட்டிலும், தலைமைக்கட்சியை வளர்த்தெடுப்பதற்கான அந்தத் தலைமையின் முயற்சிகளிலும் அதிருப்தியடைந்துள்ள போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று, இன்றைய அரசியல் சூழலில் அதனைப் பலவீனப்படுத்தக்கூடாது என்ற காரணத்தைக்காட்டி தொடர்ந்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலேயே இணைந்திருக்கின்றன.
ஆனாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கும் இடையிலான பிரசாரப் போர் என்பது ஒன்றையொன்று சாடுவதாகவே அமைந்திருக்கின்றன. முக்கியமாக அரசாங்கத்திடமிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட தலா 2 கோடி ரூபா தொடர்பான சர்ச்சை சூடு பிடித்திருக்கின்றது.
அரசாங்கத்தின் வரவு,– செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட இலஞ்சம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருக்கின்றார். அதனை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா திட்டவட்டமாக மறுத்துரைத்திருக்கின்றார்.
இந்த நிதி தொடர்பான தகவலை பாராளுமன்ற உறுப்பினர் முதலில் வெளியிட்டபோது எவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை. அவ்வாறு லஞ்சமாகப் பெறப்படவில்லை என்று மறுத்துரைக்கப்பட்டது.
அதன் பின்னர் படிப்படியாக சிலர் அந்த நிதி தங்களுக்குக் கிடைத்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். விசேடமாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அந்த நிதி என்ன வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பிலான விபரங்களை வெளியிட்டிருக்கின்றார். விசேட நிதி விசேட திட்டமாக்கியிருக்கலாமே….
வரவு, செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தொகையினர் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தனர். பின்னர் இந்த 2 கோடி ரூபா அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னரே அவர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்று கூறப்படுகின்றது.
அரசாங்கத்தினால் விசேடமாக அபிவிருத்திக்காகவே 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என்றால், அந்த விசேட நிதியை மக்களுடைய எரியும் பிரச்சினைகளாக உள்ள விசேட தேவைகளுக்கான வேலைத்திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.
அன்றாடப் பிரச்சினைகளாக வாழ்வாதாரத்திற்கான உதவிகள், தொழில்வாய்ப்புக்கான தேவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத் தேவைகள் பல மக்களுக்கு இருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான பெரிய அளவிலான வேலைத்திட்டங்கள் எதுவும் போர்ப்பிரதேசங்களை முழுமையாக உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த விசேட நிதி வழங்கப்பட்டது என்பதையும்விட வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே அது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. எனவே கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதனைக் கிடைக்கச் செய்து அந்த நிதியை ஒட்டுமொத்தமாக ஒரு விசேட தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட ஒரு பொது வேலைத்திட்டத்தில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பன்முகப்படுத்தப்பட்ட நிதி வளத்தின் ஊடாகவே இந்த விசேட நிதி வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதனை வழமையான பன்முகப்படுத்தப்பட்ட நிதிச் செயற்பாடுகளுக்கான தேவைகளுக்காகப் பயன்படுத்தாமல் விசேட திட்டத்திற்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அது தேவைகள் மிகுந்த மக்களுடைய கஷ்டங்களைப் போக்குவதுடன் கூட்டமைப்பின் மீதான நன்மதிப்பையும் உயர்த்துவதற்கு வாய்ப்பளித்திருக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற விடயமே மக்கள் பிரதிநிதிகளின் மனங்களில் முதன்மை பெற்றிருந்தால், இந்த விசேட நிதி கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எல்லோருக்கும் கிடைக்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வரவு –செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த பிரதிநிதிகளுக்கு மாத்திரமே இந்த நிதி கிட்டியிருப்பதாகத் தெரிகின்றது.
வரவு –செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களுக்கு குறிப்பாக, தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு அந்த நிதி கிடைக்கவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் பிரதிநிதிகளாகிய தனி மனிதர்களை முதன்மைப்படுத்தாமல் அவருக்குப் பின்னால், குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை மனதிற்கொண்டு அவரையும் உள்ளடக்கி அந்த அரச நிதி பெறப்பட்டு மக்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த நிதி ரொக்கப்பணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. லஞ்சமாகவும் வழங்கப்படவில்லை என்றே விளக்கமளிக்கப்படுகின்றது.
வேட்பாளர்களின் களமா, தலைவர்கள் முக்கியஸ்தர்களுக்கான களமா?
இந்த நிலையில் ஆளாளுக்குக் குறைகளைக் கூறி, கட்சிகளைத் தரந்தாழ்த்துகின்ற பரப்புரைகள் இடம்பெற்று வருவதையே காண முடிகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளை குத்திக்காட்டி விமர்சனம் செய்வதன் மூலம் அவற்றைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி அந்தக் கட்சியைத் தேர்தலில் பலவீனப்படுத்துவதே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் நோக்கமாகத் தோன்றுகின்றது.
அந்தப் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழரசுக்கட்சியினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயற்பாடுகள் கடந்த கால நடவடிக்கைகளை நினைவுபடுத்தி குத்திக்காட்டி பதிலடி கொடுத்து அந்தக் கட்சி சார்ந்த அணியை தேர்தலில் பின்னடையச் செய்யும் நோக்கத்தில் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்தத் தேர்தல் பரப்புரை செயற்பாட்டில் மூன்றாவது அணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான அணியும் களத்தில் இறங்கியிருக்கின்றது.
தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக இந்த அணிகள் மேற்கொண்டு வருகின்ற இந்தப் பிரசாரப் போரானது, மக்களை கசப்படையவே செய்திருக்கின்றது. தேர்தல் பிரசாரங்களின் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் இரகசியங்கள் வெளிவருவது மக்களுக்குப் பொதுவாக நன்மையளிக்கத்தக்கவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், ஆளாளுக்கு அரசியல் சேறடிக்கும் பாங்கில் செய்யப்படுகின்ற பிரசாரங்கள் மக்களை வெறுப்படையவே செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
நடைபெற இருப்பது உள்ளூராட்சித் தேர்தல். அந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடைய கருத்துக்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதற்குப் பதிலாக இரு தரப்புக்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தங்களுடைய செயல் வல்லமைகளையும், வீரப்பிரதாபங்களையும் மக்களிடம் வெளிப்படுத்துவதற்கான களமாக இந்தத் தேர்தல் பிரசாரத் தளத்தைப் பயன்படுத்துகின்ற போக்கையே காண முடிகின்றது.
தேசிய பிரச்சினைகள் குறித்து பேசப்பட வேண்டியது அவசியம். மறுப்பதற்கில்லை. அதேபோன்று மறைக்கப்பட்ட உண்மைகள், ஒளிக்கப்பட்ட இரகசியங்கள் என்பவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதும் அவசியம் என்பதும் ஏற்புடையதே. ஆயினும் தேர்தல் களத்தின் தன்மை, தேர்தலில் தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகளின் செயற்திறன்கள், அவரைப் பற்றிய விபரங்கள் என்பவற்றை மக்கள் அறிந்துகொண்டால்தான் சிறந்த பிரதிநிதிகளை அவர்களால் தெரிவு செய்ய முடியும்.
இந்தத் தேர்தலின் கதாநாயகர்கள், கதாநாயகிகளான வேட்பாளர்களைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிகளின் முக்கியஸ்தர்களும் தலைவர்களும் இந்தக் களத்தை ஆக்கிரமித்திருப்பது மக்களை எந்த அளவுக்குத் தெளிவுபடுத்தி சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யத் தூண்டும் என்பது தெரியவில்லை.
இது தொகுதி முறையும் விகிதாசார முறையும் கலந்ததொரு தேர்தலாகும். இதில் முன்னிலை பெறுவதும், வாக்களிப்பதற்காக முதலில் அடையாளப்படுத்தப்படுவதும் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியாகவே இருக்கும். எனவே, இது கட்சியைத் தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாக இருந்தாலும், மக்கள் என்னவோ தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நேர்மையான சரியான வழியில் பாகுபாடின்றி பூர்த்தி செய்து சேவையாற்றக் கூடிய பிரதிநிதிகளையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது.
கட்சியிலும் பார்க்க சிறந்த சேவையாற்றத்தக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் ஊடாகவே மக்கள் நன்மைகளைப் பெற முடியும். அரசியல் கட்சிகளின் ஊடாக நன்மை பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே கூற வேண்டும். எனவே தேர்தல் பரப்புரைகளின்போது வேட்பாளர்களை முதன்மைப்படுத்தி, அவர்களால் மக்களுக்கு ஆற்றக்கூடிய, ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த பிரசாரங்களை முன்னெடுப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.
உள்ளூராட்சி சபைகளில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களே பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றாலும், அவர்கள் அங்கு அரசியல் கட்சி அடையாளங்களைக் கடந்து பொதுச்சேவைகளை முதன்மைப்படுத்திச் செயற்படுகின்ற சூழலே அங்கு காணப்படுகின்றது. இதனை மனதில் கொண்ட பிரசார நடவடிக்கைகளே மக்கள் மத்தியில் செல்வாக்கையும் ஆதரவையும் பெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும்.
பி.மாணிக்கவாசகம்