தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், அவரது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பது நம்முடைய அனைவரது நோக்கமாக உள்ளது. நாம், ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாட்டுடன் இருந்தால் எதுவேண்டுமானாலும் சாதிக்கலாம். நம்முடைய இதயத்தை எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசியல் என்பது பொதுநலம். சுயநலம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்வது எம்பதே நமது நோக்கம். நாம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதன்மூலம், மற்ற மாநிலங்கள் நம்மை வியந்து பார்க்கும் வகையில் இருக்கவேண்டும். இது நமக்கு கடவுள் கொடுத்துள்ள வாய்ப்பு. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நம்முடைய குடும்பத்தை சரியாகப் பார்த்துக் கொண்டப் பிறகே, சமுகத்தைக் கவனித்தால் போதுமானது. பொதுவாழ்வில் இறங்கியப் பிறகு பதவியைப் பார்க்கக் கூடாது. மக்களுக்கு சேவை செய்வதுதான் முக்கியம். தலைமை சரியாகத்தான் முடிவெடுக்கும். நமக்குள் கருத்துவேறுபாடுகள் வருகிறதா என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.