மேற்கு ஆசியாவின் செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைப்பது பாப் அல்-மண்டாப் ஜலசந்தி. இந்த ஜலசந்தியின் வழியாகத்தான் உலகின் பெரும்பான்மையான எண்ணெய் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஜலசந்தியையொட்டி அமைந்துள்ள நாடு ஏமன். ஐக்கிய அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக உள்ள ஏமன்தான் ஐக்கிய அரபு நாடுகளில் ஏழ்மையான நாடும்கூட. 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் ஏமன் 164-வது இடத்தில் இருந்தது.
2011-ம் ஆண்டிலிருந்து அசாதாரணமான அரசியல் சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஏமன் நாட்டில், மேனாள் அதிபர் சாலே தன்னை நிரந்தர தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சி செய்தார். இதற்கு எதிராகவும் மற்றும் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். விளைவு 2012-ம் ஆண்டு, துணை அதிபராக இருந்த மன்சூர் ஹைதியிடம் ஆட்சி அதிகாரம் கைமாறியது. அன்று முதல் இன்றுவரை, ஏமன் நாட்டில் முன்னாள் அதிபரின் சார்பாக ஹவ்தி குழுவினரும், அதிபரின் சார்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ராணுவக் குழுவினரும் அவரவர் ஆட்சியை நிலைநிறுத்த போராடி வருகின்றார்கள்.
ஜனவரி 2015-ம் ஆண்டு, ஹவ்தி குழுவினர், தலைநகரான சனாவைக் கைப்பற்றியதோடு இல்லாமல், அதிபர் ஹைதி மற்றும் பல அமைச்சர்களை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். அதிபர் ஹைதி ரகசியமாகத் தப்பி ஏடன் துறைமுக நகரைச் சென்றடைந்தார். அதன்பிறகும் போர் தொடர்ந்துகொண்டே இருந்தது. வான்வழித்தாக்குதல், அல் கொய்தா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், மத ரீதியான பிளவு, ஊழல் என்று பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகின்றது ஏமன் நாடு. இப்போரின் காரணமாக, ஏமன் நாடு மிகப்பெரிய உணவுப்பஞ்சத்தை எதிர்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 21.2 மில்லியன் மக்களுக்கு அவசரகால உதவி தேவைப்படுவதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் மரண ஓலங்கள், ஒரு மில்லியன் மக்களுக்கு காலரா நோய். அதில் 2,200 பேர் இறந்து விட்டார்கள் என்று தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். மனித உரிமை மீறல்கள், பசி, பட்டினி என்று ஏமன் தன்னுடைய துயர நாட்களில்வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மறுபுறம் எப்படி இருக்கின்றார்கள், அந்நாட்டின் குழந்தைகள்? மார்ச் 2015-ல் தொடங்கி இன்றுவரை ஒருநாளில் சராசரியாக ஏமன் நாட்டில் போர் வன்முறை காரணமாக, ஐந்து குழந்தைகள் இறக்கின்றன அல்லது காயப்படுகின்றன என்று தெரிவிக்கிறது ஐ.நா-வின் யுனிசெஃப் நிறுவனம். ஜனவரி 16-ம் தேதி, வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், இதுவரை போரின் காரணமாகக் காயமுற்ற அல்லது மரணம் அடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக 5,000 ஆக இருக்கும். அதைப்போலவே, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். “இரண்டு மில்லியன் குழந்தைகள் தற்போது போரின் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. போரின்போது பிறந்த குழந்தைகள் அனைவரின் வாழ்க்கையிலும் வன்முறை, இடம்பெயர்தல், நோய், வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை வசதியின்மை ஆகியவை நீங்காத தழும்புகளாக இடம்பெற்றிருக்கும்” என்று வருத்தத்தோடு பதிவு செய்தது யுனிசெஃப்.
ஏமன் நாட்டில் குழந்தைகள் கொத்துக்கொத்தாகப் பசியின் காரணமாகவும், போரின் காரணமாகவும் மடிவதைக் கண்டு, அந்நாட்டின் பிரதமர், அவர்களுக்கு உதவுமாறு முகநூலிலும் பதிவிட்டு உதவி கோரியுள்ளார். ஹவ்திகளுக்கு எதிராக சவுதி அரேபியாவும் அந்நாட்டின் நேச நாடுகளும் களமிறங்கிய காரணத்தால், கிட்டத்தட்ட 9,245 மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். இதுகுறித்து, “இதைப்போன்ற மிகக் கொடுமையான ஒரு நெருக்கடியை மனிதம் சந்தித்தது இல்லை” என்று வெகுண்டெழுந்து ஐ.நா.பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அடிப்படை வசதிகள் மட்டுமல்ல; குழந்தைகளின் உயிருக்குக்கூட உத்தரவாதம் இல்லாத இப்போர் யாருக்கு, என்ன நன்மையை அளித்துவிடப் போகிறது என்பதற்கு, இனிவரும் காலம்தான் பதில் சொல்லவேண்டும்!