இலங்கையில் பசியின் காரணமாக பறிபோன உயிர் -அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேங்காயை பறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான கட்டான பிரதேசத்தை சேர்ந்த சந்திரவீர அமரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் கட்டான பிரதேச தோட்டம் ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், அந்த தோட்டத்தின் காவலாளியாக செயற்பட்டுள்ளார்.

தோட்டத்தின் உரிமையாளர் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தோட்டத்தின் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.

எனினும் காவலாளியாக பணி செய்வதற்காக நிரந்தர சம்பளம் வழங்கப்படாமையினால் சந்திரசேன கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் உணவு சமைப்பதற்காக வழியின்றி அதே தோட்டத்தில் 5 தேங்காய்களை பறித்துள்ளார். இதனை அறிந்த பொறுப்பாளர் அவரை கடுமையாக எச்சரித்ததுடன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

எனினும் தன்னை மன்னிக்குமாறு காலில் விழுந்த போதிலும் பொறுப்பாளர் இரக்கம் காட்டாமையினால் வேறு வழியின்றி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பசியின் காரணமாக ஒருவரின் உயிர் பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.