தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தங்கத்தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, “உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து தான் டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடர்பாக பேசினார். ஆனால், எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை முடித்துவிட்டு, தொகுதி மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். நான் தொகுதிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஏன் தெரியுமா? இதை செய்து கொடுங்கள், அதைச் செய்துகொடுங்கள் என்று மக்கள் என்னிடம் கேட்பார்கள். எம்,எல்.ஏ பதவி இல்லாமல் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் தொகுதி பக்கம் வராமல் இருந்தேன். எனக்கு எம்.எல்.ஏ பதவி தான் முக்கியம்.!” என்றார். சமீபத்தில் தங்கத்தமிழ்ச்செல்வனை அழைத்துப் பேசிய டி.டி.வி.தினகரன், கடுகடுத்தாராம். இதனால், நாளை தேனியில் நடக்க இருக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் தனக்கென ஒரு புதிய அஸ்திரத்தை எடுப்பார் என்றும் கிசுகிசுக்கிறது கட்சி வட்டாரம். முன்னதாக கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், `தேனியில் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்யப்படும் அறிவிப்பால் தமிழகம் திரும்பிப் பார்க்கும்!’ என்று தங்கத்தமிழ்ச்செல்வன் பேசியது குறிப்பிடத்தக்கது.