பேருந்துக் கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அமைச்சர் செல்லூர் ராஜு பேரன்களின் காதணி விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகை தந்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, `ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்’ என்று கூறினார். மேலும் அவர் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பற்றியும் பேசினார்.

முதல்வர், `தி.மு.க ஆட்சி காலத்தில் 3,305 கோடி ரூபாய்க்கு போக்குவரத்துக் கழகத்தின் 112 சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டுச்  சென்றனர். ஆறு ஆண்டு காலம் நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், அதே நேரத்தில் 30 முதல் 40 சதவிதம் வரை  டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஸ்டாலின் பேசும்போது, `எடப்பாடி பழனிசாமி இதயத்தில் ஈரம் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்’ என்று கூறியுள்ளார். அது உண்மை கிடையாது. அவர்கள்தான்  ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை வழங்கமால் சென்றுவிட்டார்கள். அதை நாங்கள் வந்த பின்புதான் வழங்கினோம். இதுதான் உண்மை. தமிழகத்தில் அரசு பேருந்தில் 1 கோடியே 40 லட்சம் பயணிகள் தினந்தோறும் சென்று வருகிறார்கள். அதை கருத்தில் கொண்டுதான் அனைத்தையும் செய்துள்ளோம். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்துக் கட்டண விலை குறைவே. விலை ஏற்றத்துக்குப் பின்னரும்  நாளொன்றுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பேருந்துக் கட்டணங்களை குறைத்திருக்கிறோம்’ என்றார் விரிவாக.