தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கருகும் நெற்பயிரை காப்பாற்ற உடனடியாக கர்நாடக அரசிடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் வைகோ தலைமையில் தஞ்சாவூரில் ரயில் மறியல் போரட்டம் நடைபெற்றது.
இதற்காக, ரயில்வே ஸ்டேஷன் முன்பு காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சரியாக 9.30 மணிக்கெல்லாம் ரயில்நிலையம் வந்தார் வைகோ. காவல்துறை அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதியில்லை ரயிலை மறிக்க உள்ளே விடமாட்டோம் என்றும் வெளியிலேயே கோஷம் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்றும் போராட்டகாரர்களிடம் சொன்னார்கள்.
நீங்கள் உள்ளே விடாவிட்டால் தடுப்புகளை மீறி நாங்கள் ரயிலை மறிப்போம் என வைகோ தரப்பில் சொல்லப்டது. பின்னர் காவல்துறையை சேர்ந்தவர்களும் போராட்ட குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரயிலை மறித்து கோஷம் போட்டுவிட்டு பின் எந்த இடையூறும் செய்யாமல் கைது ஆகிவிட வேண்டும் என சில நிபந்தனைகளுடன் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
பின்னர், வைகோ உள்ளிட்டவர்கள் உள்ளே சென்று தண்டவாளத்தில் அமர்ந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்ததோடு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடுமையான கோஷங்கள் எழுப்பினர். எல்லோரும் ஒரே இடத்தில் இருந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வைகோ கூறினார். பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்வதற்குத் தயாராகினர். ரயிலும் புறப்படுவதற்காக லேசாக நகர ஆரம்பித்தது.
இந்தநிலையில், ம.தி.மு.க. தொண்டர் ஒருவர், தன் கட்சிக் கொடியைப் பிடித்தவாறு ரயில் முன் பாய்ந்து மறிக்க முயன்றார். அதைக் கவனித்த போலீஸ் ஒருவர், சட்டென அவரைத் தாவி பிடித்தார். அப்போது இருவரும் தடுமாறி பக்கவாட்டில் கீழே விழுந்தனர்.இதானால் வைகோ உள்பட அனைவரும் திகைப்படைந்தனர். காவல்துறையைச் சேர்ந்தவரின் செயல்பாட்டால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் முடிந்தது போராட்டம். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்ட போலீஸைப் பாராட்டவும் செய்தனர்.