துரோகிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்! – கருணா

என்னை துரோகி என்பதில் அர்த்தமில்லை, துரோகிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர். பணத்தை வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து குறிப்பிடுகையில்,

என்னால் சண்டை நிறுத்தப்பட்டதாலேயே இன்று இளைஞர்கள் மிகவும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர். நான் சண்டை பிடிக் கமுடியாதென்று போராட்டத்தில் இருந்து விலகவில்லை. இளைஞர்களின் நன்மை கருதியே நான் விலகியிருந்தேன்.

இதனையே கருணா துரோகி என்று கூறுகின்றனர். துரோகிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்தான் உள்ளனர்.

நாங்கள் விடுதலை போராளிகளாக போராடினோம் சிறிது காலத்தின் பின்னர் வெளிநாடுகள் எங்களை பயரங்கரவாத இயக்கமாக்கியது. இதே நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் தலைவரும் பொட்டம்மானும் முடிவெடுத்து தமிழ் நாட்டில் ராஜிவ் காந்தியை கொலை செய்தனர்.

இதனை விடுதலை புலிகளே மேற்கொண்டனர் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தனர். அதனைத் தொடர்ந்து 26 நாடுகள் பயங்கரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை பண்ணியிருந்தனர்.

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் இருக்க கூடாதென அமெரிக்கா உட்பட உலக நாடுகள் முடிவெடுத்தது.

இந்த காலக்கட்டத்தில் தான் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது.

இதில் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டமையாலேயே என்னுடன் தலைவர் முரண்பட்டுக் கொண்டார்.

இதன் பின்னர் நான் ஒதுங்கிக் கொண்டேன். யுத்தத்தில் தோல்வியுற்றதற்கு நான் காரணமா?

நான் ஒரு முறைதான் அந்த போர் களத்திற்குச் சென்றுள்ளேன். பிரபாகரனை அடையாளப்படுத்துவதற்கு மாத்திரம். இதுதான் உண்மை. இயலாமை காரணமாக போரில் தோற்றுவிட்டு என்னை துரோகி என்பதில் என்ன நியாயம் உள்ளது.

மட்டக்களப்பில் இன்று பார்த்தால் தமிழரின் நிலை பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனை தட்டி கேட்பதற்கு எவரும் இல்லை பணத்தை வாங்கிவிட்டு முதலமைச்சர் பதவியை விற்றுள்ளனர்.

எமது கட்சிக்கு சர்வதேசத்தின் செல்வாக்கும் சிங்கள் மக்கள் மத்தியில் பாரிய ஆதரவும் எமக்கு உள்ளது. இதனை வைத்துக் கொண்டு நாங்கள் தமிழரின் நலனுக்காக பாடுபடுவோம்.

யாருக்கும் நாங்கள் பயப்படத் தேவையில்லை. தமிழர் ஒரு வரை முதலமைச்சர் ஆக்குவதே எமது அத்திவாரமாகும்

உலகத்திலே ஒரு எதிர்கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களித்த வரலாறு உண்டா? அது இங்குதான் நடந்துள்ளது. அனைத்திற்கும் கை உயர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதை விட அமைச்சு பதவி எடுத்துக்கொண்டு மக்களுக்கு அபிவிருத்தியை செய்யுங்கள். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

அன்று பழுகாமத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் ஆராம்பிப்பதற்கு முன்னர் ஒருவர் அவர்களிடம் கேட்டுள்ளார் “அடுத்த முஸ்லிம் முதலமைச்சரின் பெயரைக் கூறிவிட்டு கூட்டத்தினை ஆராம்பியுங்கள்” என்று.

அதற்கு பதிலளிக்க முடியாமல் அவரை விரட்டியுள்ளனர். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். இம்முறை தேர்தலில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்ப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மானுக்கு தொடர்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், இந்த கொலையில் கருணாவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.