பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருள் கொண்டு செல்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பருவ காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட பிரிவினரால் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் anti vice எனப்படுகின்ற விசேட பிரிவினரால் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில்,

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்கள் போதைப்பொருள் வைத்திருப்பார்கள் எனில் அவர்களை கைது செய்ய குறித்த மோப்ப நாய்கள் பொலிஸாருக்கு உதவியாகவுள்ளன.

கடந்த வாரம் இதேபோன்று 20 இளைஞர்கள் சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளுடன் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிவனொளிபாத மலைக்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.