சாதியை பற்றிய அம்பேத்கர் எழுப்பிய கேள்வியும், காந்தியின் அதிசயிக்க வைத்த பதிலும்
குமார் பிரசாந்த் காந்திய சிந்தனையாளர்
காந்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவரை முத்திரை குத்தி தங்களுக்கு சாதகமான வரையறைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இன்றல்ல, என்றும் தொடர்வதே.
காந்தி என்ற சொல் சமூகத்தின் ஆணிவேரில் ஆழமாக வேரூன்றிவிட்டது. அவர் மக்களின் மனதில் ஏற்படுத்திய மந்திர வித்தை, மக்களின் மனதை சென்று சேரும் ஏணிப்படியாக பயன்படுத்தும் விடயத்தில், வேறு எந்த கருத்திலும் ஒன்று சேராத அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள்.
காந்திக்கு தங்கள் மதத்தைப் பற்றி பேசுவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று இந்து சனாதனர்களும், அசல் இஸ்லாமியர்களும் நினைத்தார்கள். தலித் அல்லாத ஒருவருக்கு தலித்துகளின் வேதனை தெரியுமா? எனவே அவருக்கு எங்களைப் பற்றி பேச அதிகாரம் இல்லை என்று தலித்துகள் கருதினார்கள். மதமாற்றத்திற்கு எதிரான காந்தியின் கருத்துகளோ கிறித்துவர்களுக்கு எட்டிகாயாக கசந்தது.
‘நீங்கள் எங்களை சார்ந்தவராக இல்லாதபோது எங்களின் வேதனை உங்களுக்கு எப்படி புரியும்?’ இந்த பிரம்மாஸ்திரத்தை காந்தியை நோக்கி எழுப்பியவர் பாபா சாஹேப் அம்பேத்கர்.
இதற்கு காந்தி சொன்ன ஒரே பதில் என்ன தெரியுமா? ”நான் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதை முடிவு செய்தததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ஆனால் கழிவுகளை அகற்றும் வேலையை செய்வதற்கு அவர் பிறந்த சாதிதான் அடிப்படை என்றால், அடுத்த பிறவியில் நான் ஒரு மலம் அள்ளுபவரின் வீட்டில் பிறக்க விரும்புகிறேன்.” என்றார்
காந்தியின் இந்த பதில் அம்பேத்கரின் வாயை அடைத்து போகச் செய்தது. தாழ்த்தப்பட்டவர் என்பதை முன்னிறுத்திய அம்பேத்கர் அரசியலில் முன்னேறிக் கொண்டிருந்தபோது, “நீங்கள் பிறப்பால் தாழ்த்தப்பட்டவராக இருக்கிறீர்கள், நான் என்னை நானே தாழ்த்தப்பட்டவனாக்கிக் கொண்டேன்” என்று காந்தி சொன்னபோதும் முன்பொருமுறை இதேபோல் அம்பேத்கர் வாயடைத்து போயிருக்கிறார்.
நான் ராம ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறேன் என்று காந்தி வலுவாக சொன்னபோது, ஹிந்துத்துவ கொள்கையாளர்களின் மகிழ்ச்சி கரை புரண்டது, என்ன இருந்தாலும் காந்தி அடிப்படையில் இந்து என்ற குட்டு வெளிப்பட்டது என்று புளங்காகிதம் அடைந்தார்கள்.
ஆனால் தனது கருத்தை உடனே தெளிவாக்கிவிட்டார் காந்தி. “எனது ராமன் தசரதனின் மைந்தன். ஒரு அரசன், தனது குடிமக்களில் மிகவும் பலவீனமான தரப்பினரின் சிரமங்களை உணர்ந்தவனாக இருந்தான். அப்படிப்பட்ட ராமனின் நாடே ராம ராஜ்ஜியம்!” என்றார்
புரட்சிகர கருத்துகள் தோன்றும்போது, அன்றைய காலகட்டத்தின் பழைய மனோபாவத்திலேயே புதிய கருத்து அடையாளம் காண முயற்சிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. அதனால்தான் இந்து என்று தன்னை காந்தி அழுத்தமாக கூறிக்கொண்டார். ஆனால், இந்து என்பதற்கு காந்தி முன்வைத்த அளவுகோலை கடும்போக்கு இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
உண்மையான இந்து என்பவர் யார்? சந்த் கவி நர்சிங் மேத்தாவின் பஜனைப் பாடலை பாடி அதற்கு காந்தி பதிலளிக்கிறார்.
“வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே…” என்ற பக்திப்பாடலுக்கு நாமக்கல் கவிஞரின் பொருள் இது –
“வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
வகுப்பேன் அதனை கேளுங்கள்…
பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்…”
காந்தியின் இந்த பதிலைக் கேட்ட பிறகு எந்த இந்துக்கள் அவரது அருகில் வருவார்கள்? காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை வைத்தே அவர் விமர்சனம் செய்யப்பட்டார். காந்தி இந்துவாக இருந்தார் என்பதே அவர்களின் பிரதான குற்றச்சாட்டு. காந்தி வேதங்களை நம்புகிறார், வேதங்களோ சாதிய முறையை ஆதரிக்கின்றன.
இந்த விமர்சனங்களுக்கு காந்தி இரண்டு முறை பதிலளித்தார்: “சாதிய முறைமைகளுக்கு வேதங்கள் ஆதரவளித்ததன் அடிப்படையில் நான் அவற்றை நம்பவில்லை, ஆனால் நான் நம்பும் வேதங்கள் சாதி பிரிவினைக்கு ஆதரவளிப்பதாக யாராவது என்னிடம் காட்டினால், நான் அந்த வேதங்களை ஏற்க மறுப்பேன்”.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் விரிவடைந்துக் கொண்டேயிருந்த அரசியல் இடைவெளியை நிரப்ப காந்தியும், ஜின்னாவும் முயற்சித்தார்கள். அப்போது ஜின்னா கூறிய வார்த்தைகள் இது, “நான் முஸ்லிம்களின் பிரதிநிதி என்ற முறையில் பேசுவது போலவே நீங்கள் இந்துக்களின் பிரதிநிதியாக பேசினால் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துபோகும். ஆனால் மிஸ்டர் காந்தி, நீங்கள் இந்து-முஸ்லிம் இருவரின் பிரதிநிதியாக செயல்படுவது தான் உங்களுடைய மிகப்பெரிய சிக்கல்.”
இப்படிச் சொன்ன ஜின்னாவுக்கு காந்தி சொன்ன பதில் என்ன தெரியுமா? “ஏதாவது ஒரு மதம் அல்லது சமூகத்தின் சார்பாக நான் பேசினாலோ அல்லது அதன் பிரதிநிதியாகவோ நான் செயல்பட்டால் அது என் ஆத்மாவுக்கு எதிரானது! ஒரு மதத்தின் பிரதிநிதியாக எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நான் உடன்படமாட்டேன்” என்றார். அதற்கு பிறகு ஜின்னாவுடன் சமரச பேச்சுவார்த்தைகளை காந்தி மேற்கொள்ளவில்லை.
புனே உடன்படிக்கைக்குப் பின்னர் அவரவர் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் அதனை பிறர் பயன்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொண்ட காந்தி, தனது வயதையும் பலவீனத்தையும் பற்றி கவலைப்படாமல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். நாடு முழுவதும் ‘ஹரிஜன் யாத்திரை’ மேற்கொண்டார்.
‘ஹரிஜன் யாத்திரை’ என்றால் என்ன? சாதிய அமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான புயல் அது. அது நாடு முழுவதும் சூறாவளியாய் சுழன்றடித்தது. நீண்ட காலத்திற்கு பிறகே இந்த புயலின் தாக்கத்தை தெரிந்து கொண்ட லார்ட் மவுண்ட் பேட்டன் காந்தியை ‘ஒன் மேன் ஆர்மி’ என்று விளித்தார். இந்த ஒற்றை ராணுவம் தனது வாழ்நாள் முழுவதும் கூட்டாகவும், தனியாகவும் போர்களத்திலேயே இருந்தது, என்றுமே புறமுதுகு காட்டவில்லை!
புயல் வேகத்தில் சுழன்ற காந்தியின் ‘ஹரிஜன் யாத்திரை’அழுத்தத்தினால் வலுவிழக்கவில்லை, நாளுக்கு நாள் உக்ரமாகிக் கொண்டேயிருந்தது. இந்த நிராயுதபாணியான யாத்ரீகரை எதிர்த்த இந்துக்களின் அனைத்து குழுக்களும் ஆயுதமிழந்து கையறு நிலைக்கே சென்றன.
இதனால் என்ன செய்வதென்று புரியாத அவர்கள், காந்தி தென்னிந்தியாவில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவரை சுற்றி வளைத்தார்கள். ஹரிஜனங்களை ஆலய பிரவேசம் செய்ய வைப்பது போன்ற உங்களுடைய நடவடிக்கைகள் இந்து மதத்தின் பெருமைகளை அழித்துவிடும் என்று சாடினார்கள்.
இதற்கான பதிலை லட்சக்கணக்கான மக்களிடையே காந்தி முழக்கமாக தெரிவித்தார், “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை, இந்த மதத்தின் முகத்தை மாற்ற விரும்புகிறேன்!” என்று கூறினார்.
காந்தியின் இந்த பதிலுக்கு பிறகு எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டன,எத்தனை மத பழக்கவழக்கங்கள் மாறின, குறுகிய சிந்தனை கொண்டவர்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்பது சரித்திரத்தில் இடம்பெற்றவை.
சமூக, மத பாரபட்சங்களுக்கு எதிராக புத்தருக்கு பிறகு மிகவும் ஆழமாக, ஆழ்ந்த ஆபத்தான ஆனால் ஆக்கபூர்வமான முன்முயற்சியை செய்தவர் காந்தி என்பதை தைரியமாகவே சொல்லலாம். இதுபோன்ற மாற்றத்தை உருவாக்கிய அவர், எந்த சமயத்திற்கும் சமூகத்திற்கும் கொடி பிடிக்கவில்லை. அதுமட்டுமா? தன்னுடைய அடிப்படை லட்சியமான தேச விடுதலை என்ற போராட்டத்தையும் வலுவிழக்கச் செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காந்திக்கு முன் இருந்த எந்தவொரு அரசியல் சிந்தனையாளரோ, முன்னோடியோ, ஆசானோ, மதத்தலைவரோ சத்தியத்தை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. அவருடைய இந்த கொள்கைகள் உலகில் உருவாக்கப்பட்ட மதங்களின் வரையறைகளை உடைத்துவிட்டது.
அனைத்து மத மற்றும் சமய நம்பிக்கைகளின் ஆணிவேரையும் உலுக்கிவிட்டது.
முதலில் அவர் சொன்னார்: ‘கடவுளே சத்தியம்’ (உண்மை), காலப்போக்கில் காந்தியின் கருத்து இப்படி மாறியது: ‘அவரவர் கடவுளை உயர்த்தி காண்பிப்பதற்காகத்தான் அனைத்து பிரச்சனைகளும் எழுகிறது.’
மக்களைக் கொல்வதன் மூலம், அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம், உயர்வு தாழ்வு என பாகுபாடு காட்டுவது என அனைத்தும் கடவுளின் பெயராலே செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு வந்த காந்தி ஒரு வித்தியாசமான உண்மையை முன்வைத்தார், “கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பதே சிறந்தது.”
மதமும் இல்லை, வேதங்களும் இல்லை, நம்பிக்கைகளும் இல்லை, மரபுகளும் இல்லை, சுவாமி-குரு மஹந்த்-மகாத்மா என யாரும் இல்லை, உண்மை, சத்தியம்! சத்தியத்தை கண்டறிய, உண்மையை அடையாளம் காண, உண்மையை மக்கள் அனைவரும் கடைபிடிக்க, பின்பு அதையே மக்களின் பண்பாக மாற்றுவதே காந்தியின் மதம், இதுவே உலகத்தின் மதம். இதுவே மனித குலத்தின் மதம்! முன்பு எப்போதையும்விட இன்று இத்தகைய ஒரு காந்தியின் தேவை இன்று அவசியமாக இருக்கிறது.