`மீன் வளம் முற்றிலும் அழிக்கப்படும்!’ – சாகர் மாலா திட்டம்!

துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு ‘சாகர் மாலா திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் நாடு பொருளாதார முன்னேற்றம் காணும் எனினும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்துவரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், அரசின் பயன்பாட்டுக்காக அவர்களின் இருப்பிடங்களும் அரசினால் கையகப்படுத்தப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் இந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

sagarmala

மேலும், இந்தத் திட்டம்குறித்து சமூக ஆர்வலர்கள் “இந்தியாவின் இயற்கை வளங்கள் முழுவதையும் அழிக்க மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்தான் சாகர் மாலா திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போது இந்த தேசத்தில் இருந்து 25 கோடி மீனவர்கள் தங்கள் வாழ்ந்து வந்த கடலோரப் பகுதியில் இருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தப்படுவார்கள். மீன் வளம் முற்றிலும் அழிக்கப்படும். 350 கிமீ மீன் பிடித்தல் பகுதி 10 கிமீ என்கிற அளவில் சுருங்கிவிடும். குறிப்பாக கடல் பொக்கிஷம் அனைத்தும் அயல் தேசத்து கார்ப்பரேட் முதலாளிகளால் இங்கே இருந்து கொண்டு செல்லப்படும்.12  பெரிய துறைமுகங்கள் உட்பட 200 சிறிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்படும். 1200 தீவுகள் வெளிநாட்டு முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து பல வளங்கள் கொள்ளையடிக்கப்படும், குறிப்பாக கருங்கல் மலைகள்  உடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் ராணுவ மயமாக்கப்படும். மீத்தேன் வாயு , நியூட்ரீனோ , ஹைட்ரோகார்பன் என அனைத்து ஆபத்தான திட்டங்களுக்கும் இந்தத் திட்டம் வித்திடும்” என வேதனை தெரிவித்தனர்.