அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான மைக்கேல் வோல்ஃப் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட ‘பயர் அன்ட் பியூரி’ என்ற புத்தகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பதவி வகிக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே (46) என்பவருக்கும் இடையே முறைகேடான உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ‘பொலிட்டிக்கோ’ சஞ்சிகைக்கு சமீபத்தில் பேட்டியளித்த நிக்கி ஹாலே கருத்துவௌியிட்டிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பயணம் செய்யும் தனி விமானத்தில் நான் டிரம்ப்புடன் ஒரேயொரு முறை மட்டும் பயணம் செய்துள்ளேன்.
அப்போது நான் இருந்த இடத்தில் எங்களை சுற்றி பலரும் இருந்தனர். எனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக நான் அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் டிரம்ப்புடன் அதிகமாக பேசியதாக மைக்கேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் நான் எனது அரசியல் எதிர்காலத்தை பற்றி அவருடன் ஒருபோதும் பேசியதில்லை.
இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், தெற்கு கரோலினா மாநில கவர்னராக பதவி வகித்தபோதும் இதுபோன்ற வதந்திகளை நான் எதிர்கொண்டுள்ளேன்.
இப்போதும் இதனை அப்படிதான் பார்க்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை நிலைகுலைய வைத்துவிட முடியாது, ஒவ்வொரு முறையும் இதுபோன்ற வதந்திகளை கேள்வியுறும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது.
இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்தவில்லை, இவ்வாறான இழிச்சொல்லுக்கு ஆளாகி வேதனைப்படும் அனைத்துப் பெண்களும் தங்களது எதிரிகள் தங்களை தாழ்த்தி விடுவார்களோ? என்ற அச்சத்துடன் இருக்க வேண்டியதில்லை.
மேலும் அவ்வாறான நிலைமைகள் வரும் போது துணிந்து போராட வேண்டும் என்பதை உணர்த்தவே நான் போராடுகிறேன் என கூறியுள்ளார்.