ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்காதா?

வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

வவுனியா – உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் வசிக்கும், விபுலானந்தா கல்லூரியில் கல்விகற்ற 14 வயதுடைய மாணவி ஹரிஸ்ணவி கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

முதலில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டாலும், பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து இது தொடர்பான அறிக்கை வராத காரணத்தினால் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற போதும் இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையிலும் அந்த சிறுமிக்கு நீதிகிடைக்கவில்லை.

வித்தியா கொலை வழக்கை துரிதப்படுத்தி நீதி வழங்கியது போன்று இந்த மாணவிக்கும்துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையே பெண்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையும் எனவும் பெண்கள் அமைப்புக்கள் மேலும்தெரிவித்துள்ளன