சீனாவின் யுன்னான் மாகாண எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியைக் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் அந்த யானை கடந்துசென்றிருக்கிறது. அந்தச் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டிய யானை, இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர், மீண்டும் சீன எல்லைக்குள் நுழைந்தது. எல்லைதாண்டிய யானை, சோதனைச் சாவடியில் இருப்பவர்களையோ அல்லது அங்கிருந்த பொருள்களையோ எந்தவகையிலும் சேதப்படுத்தவில்லை. யானை எல்லையைக் கடந்ததும், சோதனைச் சாவடியில் இருந்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அருகிலுள்ள கிராம மக்களிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அந்தச் சோதனைச் சாவடியில் பணிபுரிந்து வரும் சீனப் பாதுகாப்புத்துறை அதிகாரி லீ ஜிஃபூ கூறுகையில், ‘‘தற்போது குளிர்காலம் என்பதால், யானைகளுக்குப் போதுமான உணவு காடுகளில் கிடைக்காது. இதனால், உணவு தேடி அருகிலுள்ள கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுப்பதை நாங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டு. எல்லையைக் கடந்த அந்த யானை, மீண்டும் சீன எல்லைக்குள் வந்துவிட்டது’’ என்றார். யானை எல்லையைக் கடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.