சிறையில் சசிகலா நடந்து கொள்ளும் விதம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தொடர்ந்தும் சிறை விதிகளை மீறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விமர்சனத்தில்,

சிறை கைதிகளை பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்ற விதியை ஆர்டிஐ மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா சிறையில் சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

சசிகலாவுக்கு 5 அறைகள் இருப்பதும், தனியே சமையலறை இருப்பதும் இதற்காக அவர் சிறைத் துறை ஏடிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளதாகவும் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்தது. அதில் சசிகலா சலுகைகளை பெற்றது உண்மை என்று தெரியவந்தது.

இதுவொருபுறமிருக்க, சசிகலாவும் இளவரசியும் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிறையில் உள்ள சசிகலாவை யாரெல்லாம் சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலம் கேட்டு பெற்றது. இதற்கு சிறைத் துறை அதிகாரிகள் சில தகவல்களை கொடுத்துள்ளனர்.

குறித்த ஆங்கில ஊடகத்தின் தகவலின்படி, கடந்த 26.4. 2017-இல் விவேக் ஜெயராமனும் அவருடைய மனைவியும் இளவரசியை சந்தித்துள்ளனர்.

இதை தொடர்ந்து மே 6 2017-இல் கிட்டதட்ட 10 நாட்களில் மீண்டும் இளவரசியை விவேக் சந்தித்துள்ளார். தண்டனை கைதிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையே சந்திக்க முடியும் என்ற விதியை மீறியுள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12.5.2017-இல் சசிகலாவை அவரது வழக்கறிஞர் அசோகன் சந்தித்துள்ளார். பின்னர் 10 நாட்கள் இடைவெளியில் அதாவது மே 22-ஆம் தேதி அசோகன் , சசிகலாவை மீண்டும் சந்தித்துள்ளார்.

சசிகலாவை அவரது அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரு நாட்கள் சந்தித்துள்ளார். பின்னர் பிப்ரவரி 18, 20, 23, 28, மார்ச் 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு நாள் விட்டு மறு நாளோ அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறையோ பார்வையாளர்களை அவர் சந்தித்து வருவது தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவர் வெளியே இருக்கும் அத்தனை சுகபோக வாழ்க்கைகளையும் வாழ்ந்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.