‘நிச்சயம் மரணம் அடைந்திருப்பார்கள்’ – அதிர்ச்சி பேட்டி!

சேலத்தில் 4 ரோடு பகுதியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நீளமான காஸ் சிலிண்டர் வெள்ளை நிற புகையைக் கக்கியபடி, ஊச்… என்ற ஓசையை எழுப்பிய வாறு 30 மீட்டர் பறந்து சென்று பக்கத்துவீட்டு ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று விழுந்தது. இது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு சிலிண்டரிலிருந்து காஸ் வெளியேறி வருவதை அடுத்து தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பலப்படுத்தி இருக்கிறார்கள்.

சேலம் 4 ரோடு லண்டன் ஆர்த்தோ மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ளது நத்தினசாமி முதல் குறுக்குத் தெரு. அங்கு நீதி என்பவர் வெல்டிங் கடை வைத்திருக்கிறார். அவரும் அவருடைய கடையில் வேலை செய்யும்  மாதையனும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட காலாவதியான 6 சிலிண்டர்கள் வாங்கி வந்து தன்னுடைய கடைக்கு வெளியில் வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலிண்டரில் இருந்து காஸ் வெளியேறி பறந்திருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த மாதேஷ், ”நான் வெல்டிங் கடைக்குப் பக்கத்துக் கடையில் வேலை பார்க்கிறேன். வெல்டிங் கடையில் இருந்த சிலிண்டரிலிருந்து காஸ் வெளியேறும் சத்தம் கேட்டது. அந்தக் கடைக்கார ஊழியர் மாதையனிடம் கூப்பிட்டுச் சொன்னேன். அண்ணா இந்தச் சிலிண்டர் மவுத்தைக் கொஞ்சம் உடைக்கச் சொன்னார். அதையடுத்து நான் உடைப்பதற்காகச் செல்லும்போது திடீரென வெள்ளை நிற புகையைக் கக்கியவாறு பெரிய சத்தம் எழுப்பி ராக்கெட்டைப்போல பறந்து பக்கத்தில் இருந்த  டூவிலரை ஒரே அடியில் கீழே தள்ளிவிட்டு பக்கத்துவீட்டு ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று விழுந்தது. சிலிண்டர் பறக்கும்போது எதிரே யாராவது வந்திருந்தால் நிச்சயம் அவர்கள் மரணம் அடைந்திருப்பார்கள்” என்று நடுக்கத்தோடே பேசினார்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த இந்திராணி, ”இது மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதி. இங்கு பல பட்டறைகளும் உயிருக்கு ஆபத்தான சிலிண்டர் வெல்டிங் சென்டர்களும் இருக்கின்றன. இப்பகுதியில் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கடைகளை வைக்க மாநகராட்சி எப்படி அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. பள்ளியைவிட்டு குழந்தைகள் இந்த வழியாக வருவார்கள். இந்த தெருக்களில் உள்ள குழந்தைகள் இங்கு விளையாடுவார்கள். எங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கடைகளை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.