மகிந்த அணியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு நடத்துவதற்குத் தயார் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துத் தொடர்பில், மகிந்த அணியான கூட்டு எதிரணியுள் இருவேறு நிலைப்பாடு தோன்றியுள்ளது. மைத்திரியின் கருத்துக்குச் சாதகமாகவும், எதிராகவும் கூட்டு எதிரணியால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
‘பெப்ரவரி பத்தாம் திகதிக்குப் பின்னர் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசு அமைப்பதற்கு நாங்கள் தயார். அரச தலைவர் மைத்திரிபாலவே ஆரம்பத்தில் இதனைத் தவறவிட்டார். இந்தத் தேர்தலில் மக்கள் எமக்கு அளிக்கும் வாக்குகள் மூலம் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி மகிந்த ராஜபக்சவை தலைமை அமைச்சராக்க நடவடிக்கை எடுப்போம்.
பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெற இருக்கும் தேர்தலில் நாங்கள் அடையும் வெற்றியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு அமைக்கத் தயாராக இருக்கின்றோம்’ என்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இதேவேளை, மைத்திரியின் கருத்து சுடலை ஞானம் என்று, மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் டி சொய்சா விமர்சித்தி ருந்தமை குறிப்பிடத் தக்கது.