மகிந்தவுக்கு குடியுரிமை இல்லாது போகும் அபாயம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக இணங்காணப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமை இல்லாது போகும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை அறிந்துகொள்ளாது நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமையை இரத்து செய்வது மட்டுமல்ல. இவ்வாறான நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்கு கேட்கவும் முடியாது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க தகுதி இல்லை என நாடாளுமன்றத்தில் சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையாக இது ஆணைக்குழுவின் வலுவான பரிந்துரையாகும்.

இதேவேளை, ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், சுதந்திர கட்சியில் இருந்து விலகி சென்றவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

ஊழல்கள் மோசடிகளுக்கு ஜனாதிபதி எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் மறுப்பு வெளியிட்டு வருகின்றனர் என அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.