கோர விபத்தில் கணவன் பலி – எடுத்துக்காட்டாக உயிரை விட்ட மனைவி!

பாதுக்க வெரகல – மாஹிங்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் தனது அனைத்து உறுப்புக்களை தானம் செய்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, திலினி ஜீவந்தி எல்விஸ் என்ற ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே மூளைச் சாவடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது கணவருடன் திருமண வீடொன்றிற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியமையினால் படுகாயமடைந்த நிலையில் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் 27 வயதான சமீர ஜயகொடி என்ற, குறித்த பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எனினும் ஆபத்தான நிலையில் இருந்த பெண் மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்தனர். அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஹோமாகம வைத்தியசாலையில் 5 மணித்தியாலங்கள் இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் அவரது உடற்பாகங்கள் நீக்கப்பட்டுள்ளன.

திலினி ஜீவந்தியின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள், பாத எலும்புகள் ஆகியவை சத்திர சிகிச்சை ஊடாக நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அவரது கல்லீரல் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும், ஒரு சிறுநீரகம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும் இன்னுமொரு சிறுநீரகம் மாளிகாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

பாத எழும்புகள் மனித திசு வங்கிக்கும், இரண்டு கண்களும் இலங்கை கண் நன்கொடை சங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஹோமாகம வைத்தியசாலையின் 72 வருட வரலாற்றில் இவ்வாறான சத்திரசிகிச்சை ஒன்று இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென வைத்தியசாலை இயக்குனர் பன்டுவாவெல தெரிவித்துள்ளார்.