மராட்டிய முதலமைச்சர் சோழனுக்கு புகழாரம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்தவர் ராஜேந்திர சோழன் என இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டு விழாவில் மஹாராஸ்ட்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மராட்டிய தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு மும்பை கிங்சர்க்கிள் சண்முகானந்தா அரங்கில் நடைபெற்றது.

அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் அனைவருக்கு வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர்,

மராட்டியத்தில் அதிகளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். இதேபோல தமிழகத்திலும் மராட்டியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மராட்டியர்கள், தமிழர்கள் இடையே பழங்காலத்தில் இருந்தே இணக்கமான நல்உறவு இருந்து வருகிறது. மும்பையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தபோதும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியம், கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது சயான் கோலிவாடா, தாராவி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகரை வழிபட சென்றேன். அப்போது அங்கு தமிழ், மராட்டிய கலாசாரம் கலந்து இருந்ததை பார்த்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ் மிகவும் பழமையான மொழி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடற்படையை தோற்றுவித்து ராஜேந்திர சோழன் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருவள்ளுவர் 1¾ அடியில் வாழ்க்கையின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் கூறியுள்ளார்.

கலாசாரம், பண்பாடு வேறுவேறாக இருந்தாலும் தமிழர்களும், மராட்டியர்களும் ஒருவர் மீது ஒருவர் அன்பை செலுத்தி வருகின்றனர் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.