அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா குருமன்காட்டு பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
கடந்த தேர்தலிலே பிழையான பாதையிலே வாக்களித்து நாங்கள் உருவாக்கிய பிரதேசபைகள், நகரசபைகளை என்ன செய்தார்கள் என்ன அபிவிருத்தி நடந்தது என்று எங்களுக்கு தெரியும்.
கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் மத்திய அரசினூடாக நாங்கள் கொடுத்த நிதியை செலவு செய்தார்கள் ஒழிய அவர்களிடம் அபிவிருத்தி தொடர்பான எந்த திட்டங்களும் இருக்கவில்லை.
அதன் தாக்கத்தை இன்று உணர்கின்றோம். எமது மக்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இருக்கின்றார்கள். சில கிராமங்களில் பாதைகள் அமைக்கப்படவில்லை.
எனவே மக்களே சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள். பல கட்சிகளிலிருந்து வருவார்கள் பல பாசாங்குகளை செய்து வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கேட்பார்கள்.
அவர்களால் உங்களுக்கும், உங்கள் ஊருக்கும் எந்த அபிவிருத்திகளையும் செய்ய முடியாது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நல்லாட்சியை பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினூடாக கொண்டு வந்த நாம் எமது மக்களின் கல்வியையும், பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முப்பது வருடங்களாக யுத்தத்தின் பின் சமாதானம். சமாதானத்தின் பின் அதைத்தருவோம் இதைத்தருவோம் என சொல்பவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே நாங்கள் உருவாக்கிய பிரதமர் இருக்கிறார். நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
அதனால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நமது எதிர்காலத்தை, நமது தலைவிதியை, நமது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்தத் தேர்தலிலே யானைச் சின்னத்திற்கு வாக்களித்து யானையின் மூலம் ஒற்றுமையை காட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.