நீதிபதியிடம் கதறிய நடிகை ஸ்ருதியின் தம்பி!

வெளிநாட்டு தமிழர்களை குறிவைத்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணமோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தினரும் சிறையில் கம்பி எண்ணி வருகின்றனர்.

இதுதவிர ஸ்ருதி குடும்பத்தாரை விசாரிக்க சென்ற போது பொலிசாரை மிரட்டியுள்ளனர், ஸ்ருதியின் நண்பர் மோசமாக தாக்கியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஸ்ருதியின் குடும்பத்தாரிடம் பணமோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களை குறிவைத்து வலையில் சிக்க வைத்ததும், லட்சக்கணக்கில் சுருட்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இதுதவிர ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் மேல்படிப்பு படிப்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் பொலிசாரை மிரட்டியது தொடர்பான விசாரணை நேற்று கோவை நீதிமன்றத்தில் நடந்தது.

இதன்போது ஸ்ருதி, அவரது அம்மா சித்ரா, தம்பி சுபாஷ் மற்றும் வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆஜராகினார்.

அப்போது ஸ்ருதியின் தம்பி நீதிபதியிடம் கண்ணீர்விட்டுக் கொண்டே, நான் 12ம் வகுப்பு படிக்கிறேன், இன்னும் சில மாதங்களில் முழுத்தேர்வு வரப்போகிறது.

சிறையில் இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை, என்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நீதிபதி, ஜாமீன் கேட்டு முறையாக வக்கீலிடம் மனுத்தாக்கல் செய்யச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நால்வரையும் பிப்ரவரி 13ம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.