ஊவா மாகாண முதலமைச்சர் மனித உரிமை ஆணைக்குழுவில்!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க சற்று நேரத்திற்கு முன் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

பதுளையில் மகளிர் பாடசாலையின் தமிழ் பெண் அதிபரை மண்டியிடச் செய்தார் என முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக முதலமைச்சர் தசாநாயக்க இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவிடம், ஆணைக்குழுவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னதாக இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த அறிவுறுத்தலை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.

நியாயமான காரணங்களின்றி ஆணைக்குழுவின் உத்தரவை புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு, ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்திருந்தது.

அத்துடன், அவருக்கு பிரிதொரு தினத்தை வழங்க முடியாது என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது. இருப்பினும், இன்றைய தினம் அவர் முன்னிலையாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், முன்னதாக பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரிடம் கடந்த 25ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சுமார் 10 மணிநேரம் விசாரணைகளை நடத்தியிருந்தது.

இதேவேளை, பதுளை பொலிஸ் தலைமையக பரிசோதகர் ஈ.எம்.ரி.பீ.வி.தென்னகோனும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.