தூக்கிட்டு இறந்த புதுப்பெண்! கணவரே கொன்றுவிட்டதாக தந்தை குற்றச்சாட்டு!

சென்னையில் பெண் மருத்துவர் தூக்கிட்டு இறந்த நிலையில் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என பெண்ணின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த விஷ்ணு பரத் என்பவருக்கும் ஷாலினி (26) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள்.

திருமணத்துக்கு பின்னர் சென்னைக்கு இருவரும் குடிபெயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஷாலினி வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த விஷ்ணு மனைவி இறந்து கிடப்பதை பார்த்துவிட்டு ஆந்திராவில் உள்ள ஷாலினியின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு ஷாலினியை கொடுமைப்படுத்தி விஷ்ணு கொலை செய்துவிட்டார் என ஷாலினியின் குடும்பத்தார் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து ஷாலினியின் தந்தை சசிதர் ரெட்டி கூறுகையில், திருமணத்துக்கு முன்னர் முதலில் வரதட்சணை வேண்டாம் என கூறிய விஷ்ணு குடும்பத்தார் நிச்சயம் ஆன பின்னர் 10 லட்சம் கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் என கூறினார்கள்.

பின்னர் அவர்களிடம் பேசி 5 லட்சம் தருவதாக நாங்கள் ஒப்பு கொண்டு அதற்கு கால அவகாசம் கேட்டோம்.

ஆனால் பணம் உடனடியாக வேண்டும் என அவர்கள் கேட்ட நிலையில் கெஞ்சி அவர்களை சம்மதிக்க வைத்தோம்.

திருமணத்துக்கு பின்னர் கணவர் கொடுமைப்படுத்துவதாக ஷாலினி என்னிடம் கூறவில்லை.

ஆனால், சம்பவம் நடந்த அன்று பார்ட்டிக்கு சென்று குடித்துவிட்டு வந்து ஷாலினியை விஷ்ணு கொலை செய்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக விஷ்ணு மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள போதும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.