இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம்செய்து, அந்தப் பெண்களிடமிருந்து கோடிக்கணக்கில் சுருட்டிய ‘கல்யாண மன்னன்’ புருஷோத்தமனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மகள் கீதாஞ்சலியையும், நேற்று இரவு கோவை போலீஸார் கைதுசெய்தனர்.
கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்தமனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் புருஷோத்தமன், ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, புருஷோத்தமனால் பாதிக்கப்பட்ட கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரால் அம்பலமானது, புருஷோத்தமனின் லீலைகள். கோவை காந்திபுரத்தில் உள்ள ‘மெட்டி ஒலி’ திருமணத் தகவல் மையத்தின் உரிமையாளர்களான வனஜாகுமாரியும்,மோகனும் தங்கள் மையத்தில் இரண்டாம் திருமணத்திற்காகப் பதிவுசெய்திருந்த கணவரை இழந்த பணக்காரப் பெண்களை புருஷோத்தமனுக்கு அறிமுகம் செய்துவைத்து திருமணம் முடித்துவைத்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், புருஷோத்தமனின் மகள் கீதாஞ்சலியும், தனது தந்தைக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பெண்கள் ஒவ்வொருவரிடமும், விதவிதமான பொய்களைக் கூறி கோடிக்கணக்கில் மோசடிசெய்த புருஷோத்தமன், போலீஸில் புகார் அளிக்கப்பட்டதும் தலைமறைவானார். காவல்துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடிக்கொண்டிருந்த நிலையில், புருஷோத்தமன் (28.1.2018 அன்று) கைது செய்யப்பட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால், போலீஸார் அதை மறுத்தனர். இந்நிலையில், புருஷோத்தமனையும் அவருடைய மகள் கீதாஞ்சலியையும் நேற்று இரவு கைதுசெய்து, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.