6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சத்தம்போட்டு கத்திய சிறுமியைத் துண்டால் கழுத்தை நெறித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கீழத்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர், சின்னத்தம்பி. இவரது 6 வயது மகள் சிவகாமி. அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்துவந்தாள். இவரது வீட்டுக்கு அடுத்த வீட்டைச் சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவரது மகன் கண்ணன் (14). அடுத்த வீட்டில் உள்ளவர் என்பதால், அடிக்கடி சிறுமி சிவகாமியைத் தூக்கிவைத்துக்கொண்டு விளையாடிவருவாராம். இதை, இருவரது பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில்,அந்தத் தெருவில் உள்ளவர்கள் கிராமத்தில் நடக்கும் விசேஷத்துக்காகச் சென்றுவிட்டார்களாம். அங்கன்வாடியில் இருந்த சிறுமி சிவகாமியை, ”உன்னை உங்க அப்பா கூட்டிட்டு வரச்சொன்னார்” என்று சொல்லி, அழைத்துச் சென்றார் கண்ணன். வீட்டுக்கு அழைத்துச் சென்றதும், கதவைப் பூட்டிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, சிறுமி சிவகாமி அழுது சத்தம் போடவே, துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலைசெய்து, வீட்டில் அடுப்பு எரிக்க வைத்திருந்த மண்ணெண்ணெயை சிறுமியின் உடலில் ஊற்றித் தீ வைத்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார் கண்ணன்.
வீட்டுக்குள்ளிருந்து கருகிய துர்நாற்றம் வீசியதும், அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி சிவகாமி கழுத்தில் துண்டால் இறுக்கப்பட்டு, தீயில் கருகிய நிலையில் இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமியைக் கொலைசெய்த சிறுவன் கண்ணனை தட்டப்பாறை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் கழுத்தை நெறித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொன்ற சம்பவம், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.