எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரச தரப்பு வெற்றிபெற்றால் நந்திக்கடலில் மௌனிக்கச் செய்யப்பட்ட தமிழ் பிரிவினைவாதப் போராட்டம் மீண்டும் உயிர்பெறும்.
இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித் தார்.
அவர் தெரிவித்ததாவது-:
பெப்ரவரி 10ஆம் திகதி மகரகம நகர சபை இலகுவாக தன்வசமாகிவிடும் என்று சில தரப்புகள் வேடிக்கை பார்த்தன. ஆனால் அவர்களுக்குத் தற்போது ஏமாற்றம் கிட்டியுள்ளது. பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குட்டித்தேர்தல்.
இது சாதாரண தேர்தல் என்று கூறிக்கொண்டா லும் இந்தத் தேர்தல் இலங்கையின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும் என்பதே உண்மையான விடயமாகும். நாடு பிளவுபடுமா, இல்லையா என்ற தீர்மானம் மக்களால் வழங்கப்படும்.
நாட்டின் தலைவிதியுடன் பிணைந்த இந்தத் தேர்தல் பிரிவினைவாத அரசமைப்பைக் கொண்டு வருவதா, இல்லையா என்பதை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாகவே அமையும். இந்தத் தேர்தலில் தவறுவிட்டால் தமிழ் ஈழத்துக்கு வழி திறக்கப்படும்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரால் உருவாக்கப்படும் அரசமைப்பால் செய்யப்படும் அதிகாரப் பரவலாக்கத்தில் எதிர்காலத்திலும் மாற்றம் செய்யமுடியாது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தலாகக் கருதப்படவேண்டும்.
நந்திக்கடலில் முற்றுப்பெற்ற போருக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாயின் தேர்தலில் தாமரை மொட்டுக்கு வாக்களிக்கவேண்டும்.
இல்லாவிடின் நந்திக்கடலில் மௌனிக்கச் செய்யப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாதப் போராட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுப்பதாக அமைந்துவிடும் என்றார்.