தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! இந்த வரி தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் புகழையும் எடுத்துக்காட்டுகின்றது.
தமிழ் மொழியின் இருப்புக்காக சமகாலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மொழி கொலை செய்யப்படுவதையும் அண்மைய நாட்களில் வெகுவாக அவதானிக்க முடிகின்றது.
பேருந்தில் தொடங்கி பெயர் பலகை வரையில் பல்வேறு இடங்களில் தமிழ் மொழி எழுத்து பிழையாகவும், இலக்கணப் பிழையாகவும் எழுதப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
ஏன் சில அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் பிழையாக எழுதப்பட்டுள்ள சம்பவங்களும் இருக்கின்றன. அந்த வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதற்காக தற்போது வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் யாழ்ப்பாணம் என்பதற்கு பதிலாக யாங்பாணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின், தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சின் கீழேயே அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இந்நிலையில், தமிழ் மொழியை கொலை செய்யும் வகையில் பிழையாக எழுதப்படும் விடயம் குறித்து உரிய அமைச்சும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.