அம்ருதா ஜெயலலிதா மகள் என்பது பொய்! – தீபக்

ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பது பொய்யானது, மரபணு சோதனை கோர, அவருக்கு உரிமையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபக் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விசாரணை, வரும்,20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த, அம்ருதா தாக்கல் செய்த மனுவில், ‘என் தாயார் ஜெயலலிதா; அவரது சகோதரி சைலஜாவிடம், என்னை தத்து கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு, வைஷ்ணவ அய்யங்கார் பிராமண சமூக வழக்கப்படி இறுதி சடங்குகள் நடத்த, அனுமதிக்க வேண்டும்’ என, கூறியிருந்தார். ஜெயலலிதா மகள் என்பதை நிரூபிக்க, மரபணு சோதனை நடத்தவும் கோரியிருந்தார்.

இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஜெயலலிதாவின் சகோதரர் மகன், தீபக், மகள், தீபாவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில், தீபக் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தீபக் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

அம்ருதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், பொய்கள் தான் உள்ளன. என் பாட்டி சந்தியாவுக்கு, ஜெயகுமார் என்ற மகனும், ஜெயலலிதா என்ற மகளும் தான் இருந்தனர். சந்தியாவின் உயிலில், அது தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா என, அம்ருதா கூறியிருப்பது பொய்யானது. 1980ம் ஆண்டுகளில், நான்கு படங்களில், முன்னணி கதாபாத்திரங்களில், ஜெயலலிதா நடித்து வந்தார். தமிழ் இதழுக்கும், தொடர் கட்டுரை எழுதி வந்தார்.

சென்னையில் நடந்த, 27வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், அவர் பங்கேற்றதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அந்த கால கட்டத்தில், அதாவது, 1980 ஆகஸ்ட், 14ல், ஜெயலலிதா மகளாக அம்ருதா பிறந்தார் என்பது, முழு பொய்.

நான், 1980 ஆக., 27ல் பிறந்தேன்; போயஸ் தோட்டத்தில் வளர்ந்தேன். ஜெயலலிதாவுடன், என் தந்தை, தாயார், சகோதரி தீபா ஆகியோரும் வசித்து வந்தோம். அந்த கால கட்டத்தில், ஜெயலலிதா மகளாக பிறந்ததாக கூறுவது பொய்யானது.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அம்ருதாவின் தாயாருக்கு எதிராக, தமிழக அரசு அவதுாறு வழக்கு தாக்கல் செய்தது. மனுதாரர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களை, தகுந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களை அபரிக்க நடந்த சதி திட்டமாக, இந்த கதை ஜோடிக்கப்பட்டுள்ளது.

அம்ருதாவுடன் தொடர்பில் இருக்க, ஜெயலலிதா விரும்பியிருந்தால், சைலஜாவுக்கு எதிராக, அவதுாறு வழக்கு தொடுத்திருக்க மாட்டார்.

சூழ்நிலைக்கு ஏற்ப தான், இறுதி சடங்குகள் மேற்கொள்ள முடியும். ஆளும் கட்சியின் தலைவராக இருந்து, ஜெயலலிதா இறந்துள்ளார். அவருக்கு, லட்சக்கணக்கில் தொண்டர்கள் உள்ளனர்.

போயஸ் தோட்டத்திலும், உடல் புதைக்கப்பட்ட இடத்திலும், வைஷ்ணவ அய்யங்கார் பிராமண சமூகத்தின் வழக்கப்படி, இறுதி சடங்குகளை நான் மேற்கொண்டேன். அப்போது, அமைச்சர்கள் இருந்தனர்.

ஜெயலலிதாவின் புகழை, கண்ணியத்தை சீர்குலைக்க, மனுதாரர்கள் விரும்புகின்றனர்.உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், பொய்யான மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.

மரபணு பரிசோதனை கோர, அவருக்கு உரிமை இல்லை. லலிதா, ரஞ்சனி ரவீந்திரநாதன் ஆகியோரின் குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.