மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய எவரையும் மன்னிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அப்பாவி தொழிலாளர்களின் ஊழியர்சேமலாப நிதியம்2008 ஆம் ஆண்டு முதலே பாரியளவில்கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிபிலை, மெதகம பிரதேசசபை விளையாட்டரங்கில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளில் உள்ளடங்கியுள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்தி ஊழல் அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அதற்கு எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மக்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகின்றது.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய எவரையும் மன்னிக்க முடியாது. மத்திய வங்கி ஊழல், மோசடி பற்றிய அறிக்கையில் 2015-2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், அப்பாவி தொழிலாளர்களின் ஊழியர்சேமலாப நிதியம்2008 ஆம் ஆண்டு முதலே பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதென ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.