எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உருவாகியிருக்கும் மோதல்!

அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உருவாகியிருக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. உள்கட்சித் தேர்தலை நடத்திப் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் காய்நகர்த்தி வரும் நிலையில், டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டம் வகுத்துள்ளார். முதல் நிகழ்ச்சியை அவர் தஞ்சையில் இருந்து நாளை (பிப்ரவரி 2) தொடங்குகிறார். சட்டமன்றத் தொகுதிவாரியாக பொதுமக்களை அவர்களின் பகுதிகளுக்கே தேடிச்சென்று சந்திக்கும் வகையில், தினகரனின் சுற்றுப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன்

இதுகுறித்து, டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மேலூரில் முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக அந்தக் கூட்டத்தில் கூடியவர்களின் எழுச்சியை ஆளும்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சுற்றுப்பயணம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரன் முடிவு செய்திருந்தார். ஆனால், அதற்கு அனுமதி தராமல் தடுத்துவிட்டனர். இப்போதும், பொதுமக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தக்கூட காவல்துறையினர் அனுமதிதர மறுக்கிறார்கள். தினகரனுக்கு மக்கள் மத்தியிலும், அ.தி.மு.க. தொண்டர்களிடையேயும் கிடைத்துவரும் எழுச்சியைப் பார்த்து ஆளும்கட்சியினர் பயப்படுகிறார்கள்.

அதனால்தான், அ.தி.மு.க-விலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோரை ஓ.பி.எஸ்.- எடப்பாடி தரப்பு நீக்கியுள்ளது. இவர்கள், நீக்கிய யாருமே எவ்வித வருத்தமும் இல்லாமல் உற்சாகமாகவே வழக்கம்போல கட்சிப் பணிகளைச் செய்து வருகிறார்கள். புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவருமே எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனை உணர்த்தும் நோக்கிலேயே தினகரன், மக்களைச் சந்திக்க வீடு தேடிச் செல்கிறார். கிராமப்பகுதிகளுக்கு நேரில் செல்லும்போதுதான், அந்தப்பகுதி மக்களின் பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ள முடியும். தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு என்று எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் எட்டு நாளில் 60 இடங்களில் தினகரன் பேசுகிறார்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி

தினகரனின் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ குறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு அரசு என்பது மக்களைக் காக்கும் அரண். அதற்கு முற்றும் முரணாக உள்ள இந்தத் தன்னலக்காரர்களின் கூட்டம், தங்களை மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற்றிக்கொள்ள, நம் மாநிலத்தின் உரிமைகளையும், கோடிக்கணக்கான தமிழக மக்களின் நலனையும் பின்னுக்குத் தள்ளுவது பொறுத்துக் கொள்ளமுடியாத பெருங்கொடுமை. நம் அம்மா, எதிர்த்து நின்ற திட்டங்கள் எல்லாம், அவரது மறைவுக்குப் பிறகு வரிசையாக தமிழகத்துக்குள் அணிவகுத்து வர, இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள், தமிழகத்தைக் காக்க, அம்மா வகுத்த மக்கள் நலக் கொள்கை என்ற கவசத்தை வீசியெறிந்த காரணத்தால் தமிழகத்தின் மீது விழுந்துள்ள வெட்டுக்காயங்கள் எத்தனை? எத்தனை?

நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஜி.எஸ்.டி, மாநில சுயாட்சி உரிமை, ஹைட்ரோ கார்பன் திட்டம், கரும்பு விவசாயிகளின் கண்ணீர், ஒகி புயல், டெங்கு பாதிப்பு, மீனவர் பிரச்னை, நெசவாளர்கள் பாதிப்பு என அத்தனை துன்பத்தையும், அநியாயத்தையும் மக்களுக்கு இழைத்த பின்னாலும், கொஞ்சம்கூட குற்ற உணர்வில்லாமலும், மனசாட்சியற்ற முறையிலும் செயல்படும் ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் அடிமைப்பாதையில் தமிழகத்தை இழுத்துச் செல்லும் பழனிசாமி கூட்டத்தின் மக்கள் விரோத அரசியல் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்திடவும் மாநகரம், நகரம், பேரூர், கிராமம் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், கட்சியின் செயல்வீரர்கள் என்று பல்வேறு தரப்பினரைச் சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 2-ம் தேதியன்று திருவிடைமருதூர், 3-ம் தேதி கும்பகோணம், 4-ம் தேதி பாபநாசம், 5-ம் தேதி -திருவையாறு,  பிப்ரவரி 10-ம் தேதி தஞ்சை, 11-ம் தேதி ஒரத்தநாடு, 12-ம் தேதி பட்டுக்கோட்டை, 13-ம் தேதி பேராவூரணி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்குத் தொடங்கும் தினகரனின் சுற்றுப்பயணம், இரவு 9 மணி அளவில் முடியும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. திறந்த வேனில் செல்லும் தினகரனை வரவேற்க வழிநெடுகிலும் ‘தடபுடல்’ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்தைப்போல, பிரமாண்டமான முறையில் வரவேற்புக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தை உன்னிப்பாக கவனித்து ரிப்போர்ட் போடும் படி உளவுத்துறைக்கு உத்தரவுகள் பறந்துள்ளன.

பொதுக்கூட்டங்களுக்கு தடை போட்டுள்ளதால் டி.டி.வி.தினகரனின் புதிய அதிரடி ஆரம்பம்!