மீண்டும் நிராகரிக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஸவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை!

அவன்கார்ட் வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியை பெறாது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிராக கோத்தபாய ராஜபக்ஸவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அல்லது ஆணைக்குழு சார்பாக எவரேனும் ஒருவர் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை என மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய கோத்தபாய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி, கொழும்பு பிரதம நீதவானால் வழங்கப்பட்ட உத்தரவு சட்டரீதியானது எனவும் உத்தரவிட்டுள்ளார்.