மெராயா – தங்ககலை தோட்ட மேற்பிரிவு மக்களை சிறுத்தைகள் அச்சுறுத்துவதாகவும், சிறுத்தைகளிடம் இருந்து உயிரை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் நேற்றைய தினம் மாலை தங்ககலை மேற்பிரிவு தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், சுமார் 50இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது, தங்களின் கோரிக்கைகளை பதாதைகள் ஊடாகவும், கோஷங்கள் இட்டும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமது பிள்ளைகள் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான வீதியை கடந்து பாடசாலைக்கு செல்கின்றனர். இந்த வீதி தேயிலைக் காடுகளின் ஊடாக வருவதால் அந்த தேயிலைத் காடுகளில் மறைந்திருக்கும் சிறுத்தைகள் எந்த நேரத்திலும் தாக்ககூடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வழமைக்கு மாறாக இந்த தோட்டத்தை தோட்ட நிர்வாகம் உரிய பராமரிப்பினை மேற்கொள்ள தவறி வருவதால் தேயிலைக்கு மேலாக பலவித புற்கள் வளர்ந்து பற்றை காடுகளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தோட்ட நிர்வாகம் நாள் ஒன்றுக்கு எதிர்பார்க்கப்படும் 18 கிலோகிராம் கொழுந்தை கொய்து கொடுக்க முடியாது எனவும், மாத வருமானத்தில் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, எமது தோட்டத்தினை நிர்வாகம் செய்யும் பெருந்தோட்ட கம்பனி தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து அதிகாரிகளை எமது தோட்டத்திற்கு அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.