முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தான் கூறியதை கேட்காத காரணத்தினால், கெடுதியான பிரதிபலன்களை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
மூன்றாவது தடையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என மகிந்த ராஜபக்சவிடம் கேட்டு கொண்டேன், அவர் கேட்கவில்லை. இதனால், அவர் இன்று தோல்வியடைந்த வேட்பாளராக மாறியுள்ளார்.
அதேபோல் ரவி கருணாநாயக்கவை நிதியமைச்சராகவும், அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராகவும் நியமிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினேன். அவரும் கேட்கவில்லை. இதனால், அவர் இன்று ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கட்சியோ அல்லது வேறு பேதங்களை கவனத்தில் கொள்ளாது எவராக இருந்தாலும் தண்டனையை பெற்று கொடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக தற்போது சட்டத்தை செயற்படுத்தப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி நடத்தினாலும் நாங்கள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகிறோம்.
எவர் விமர்சித்தாலும் திட்டினாலும் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நான் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பின்னர் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தற்போது நடிப்பில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மத்திய வங்கியை கொள்ளையிட்டனர். அதனை பிரித்து கொண்டனர். சிலரை கைது செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் பிணை வழங்குவார்கள்.
அதன் பின்னர் வழக்கு முடிந்து விடும். எம்மை பெரிய நரகத்தில் பிடித்து தள்ளி வரும் இவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மறந்து போயுள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.