யாழ் நட்சத்திர ஹொட்டலாக மாறும் ஜனாதிபதி மாளிகை!

யாழ். காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையை ஆடம்பர நட்சத்திர ஹொட்டலாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய மாளிகையை ஹொட்டலாக மாற்ற சர்வதேச கேள்வி மனுக்கள் அடுத்த சில வாரங்களில் கோரப்பட உள்ளன.

காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகைக்கு தற்போது சுமார் 300 கோடி ரூபா செலவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க 300 கோடி ரூபா செலவாகியுள்ளது. அதனை ஹொட்டலாக மாற்ற சர்வதேச கேள்வி மனுக்களை கோரவுள்ளோம்.

ஜனாதிபதியின் செலவுகளில் 90 வீதத்தை நான் குறைத்துள்ளேன். பணியாளர்கள், விமான பயணங்கள், இணைப்புச் செயலாளர்கள் போன்றவற்றையும் நான் குறைத்துள்ளேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் காங்கேசன்துறையில் எந்த ஜனாதிபதி மாளிகையும் நிர்மாணிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அழிக்கும் வரை யாழ். கோட்டையில் ஜனாதிபதி மாளிகை ஒன்று இருந்தது எனவும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வரும் சர்வதேச தொடர்புகளுக்கான மத்திய நிலையம் எனவும் நிர்மாணிப்பு பணிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

காங்கேசன்துறை மற்றும் அருகம்மை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள் ஜனாதிபதி மாளிகைகள் அல்ல எனவும், அவை சர்வதேச மாநாட்டு நிலையங்கள் எனவும் இவற்றில் தங்குமிடங்கள் இருப்பதே ஏனைய மாநாட்டு நிலையங்களில் இருந்து வேறுப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நோக்கத்தில் இருந்து வந்த மகிந்த ராஜபக்ச, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் போன்ற இடங்களிலும் ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.