சென்னைப் பெரியமேடு போலீஸாரிடம் சிக்கிய சாமியார் ஹரிஹரனிடம் நடத்திய விசாரணையில் அவரது மோசடிகள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் கால்டாக்ஸியில் வந்த சாமியார், தற்போது இனோவா காரில் வலம் வந்தது தெரியவந்தது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சையது பயாஸ். இவர், பெரியமேடு பகுதியில் ஷூ உற்பத்தி தொடர்பான தொழிலை நடத்திவருகிறார். தொழிலை விரிவுப்படுத்த சையது பயாஸிக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், தன்னுடைய நண்பரிடம் ஆலோசித்தபோது, மயிலாப்பூரில் லோன் வாங்கிக் கொடுக்கும் அலுவலகம் நடத்திவரும் ஹரிஹரன் அறிமுகமாகியுள்ளார்.
ஹரிஹரனிடம் தான் ஏமாந்த கதையை விவரித்தார் சையது பயாஸ். “தொழிலை விரிவுப்படுத்த பணம் தேவைப்பட்டதும் நண்பர் மூலம் சாமியார் ஹரிஹரனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைச் சந்திக்க கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மயிலாப்பூருக்குச் சென்றேன். அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, பூஜை அறைக்குள் நுழைந்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அடுத்து, கழுத்தில் ருத்திராட்ச மாலை, காவி வேட்டி, உடல் முழுவதும் விபூதி என சாமியார் போல காட்சியளித்தார் ஹரிஹரன். அவரது பேச்சு, ஆன்மிகத்தை தொடர்புடையதாகவே இருந்தது.
40 லட்சம் ரூபாய் லோன் வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், ‘ஏற்பாடு பண்ணிடலாம். ஆனால்.. அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதைச் செய்துவிட்டால் ஒரு மாதத்தில் பணம் உங்கள் கைக்கு வந்துவிடும்’ என்றார். மேலும், உங்களுக்கு லோன் கொடுக்கும் வங்கியில் கமிட்டி மெம்பராக நான் இருப்பதாகக் கூறினார்.
அவர் தெரிவித்தபடி, ஹரிஹரனின் வங்கி அக்கவுன்டில் லோன் தொகைக்கு மூன்று சதவிகிதம் கமிஷன் தொகையான ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை அனுப்பினேன். அதன்பிறகு மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கியில் அக்கவுன்ட் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தேன். மாதங்கள் கடந்தன, லோன் தொகை எனக்குக் கிடைக்கவில்லை. இதனால் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹரிஹரனைச் சந்திக்க மயிலாப்பூருக்குச் சென்றேன். அப்போது அவர், ‘உங்களுக்கு லோன் ரெடியாகிவிட்டது. லோன் தொகைக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள ஒரு லட்சத்துக்கு மேல் மாதச்சம்பளம் வாங்கும் இரண்டு அரசு ஊழியர்கள், கையெழுத்திட வேண்டும்’ என்று கேட்டார். அதன்படி என்னுடைய உறவினர்கள் இரண்டு பேரிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தேன். அதில் ஒருவரை வங்கி நிராகரித்து விட்டதாக ஹரிஹரன் தெரிவித்தார்.
இதையடுத்து அதற்கும் அவரே ஏற்பாடு செய்வதாகக்கூறி ஒரு சதவிகித கமிஷன் தொகையான 40 ஆயிரம் ரூபாயை என்னிடம் கேட்டார். இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துவிட்டேன். எனவே, லோன் வந்தவுடன் கமிஷன் தொகையைக் கொடுப்பதாகக் கூறினேன். அதன்பிறகு சில வாரம் கழித்து ஹரிஹரன், வங்கி அதிகாரி என்று ஒருவரை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அவர், வங்கியில் உங்களுக்கான ‘செக்’ தயாராக உள்ளது. விரைவில் லோன் தொகை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் பேசினார். ஆனால், அதன்பிறகும் பணம் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் ஹரிஹரன் என்னுடைய செல்போன் அழைப்பை எடுப்பதில்லை. இதனால், மயிலாப்பூர் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கும் அவர் இல்லை. இதனால், ஹரிஹரன், குறித்து வங்கியில் விசாரித்தேன். ஆனால், அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஹரிஹரனின் வீட்டு முகவரி கிடைத்தது. அங்குச் சென்ற போது என்னைப் போல ஒருவரை போனில் ஏமாற்றிக்கொண்டிருந்தார் ஹரிஹரன். அப்போதுகூட உங்களுக்கு இன்னும் ஒருவாரத்தில் பணம் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார். அதைநம்பி வந்துவிட்டேன். ஆனால், பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நான், ‘லோன் வேண்டாம், நான் கொடுத்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிடுங்கள்’ என்று ஹரிஹரனிடம் கூறினேன். அதற்கு அப்படியா, லோனை கேன்ஷல் செய்துவிடுகிறேன் என்று கூறினார். அதன்பிறகும் நான் கொடுத்தப் பணம் எனக்குக் கிடைக்கவில்லை. இதனால்தான் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீஸார் ஹரிஹரனை கைது செய்தனர். ஆரம்பத்தில் என்னைச் சந்திக்க ஹரிஹரன் வந்தபோது, கால்டாக்ஸியில் வந்தார். தற்போது இனோவா காரில் வருகிறார். என்னைப் போல பலரை அவர் ஏமாற்றியுள்ளார்” என்றார்
பெரியமேடு போலீஸார் கூறுகையில், “ஹரிஹரனிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றோம். அவரது வீடு முழுவதும் சாமி போட்டோக்கள் இருந்தன. அது வீடு போல இல்லை. கோயில் போலவே காணப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்திலும் ஏராளமான சாமி போட்டோக்கள் உள்ளன. ஆன்மிகவாதியான ஹரிஹரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான பெயர்களும் போன் நம்பர்களும் உள்ளன. அதில் சில ரகசியக் குறியீடுகளும் உள்ளன. அதுகுறித்து ஹரிஹரனிடம் விசாரித்த போது ‘டைரியில் உள்ளவர்களுக்கு லோன் வாங்கிக் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். அதில் சையது பயாஸ் பெயரும், போன் நம்பரும் இருந்துள்ளது.
ஹரிஹரன் பயன்படுத்திய இனோவா காரும் கடனில் வாங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறார். பலரை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஹரிஹரன், பணத்தை ஆன்மிகத்துக்கும் அன்னதானத்துக்கும் அதிகளவில் செலவழித்துள்ளார். ஹரிஹரனிடம் ஏமாந்தவர்களின் பட்டியலில் டாக்டர்கள், பட்டதாரிகள் எனப் பலர் உள்ளனர். பணத்தைக் கேட்டு திரும்பக் கிடைக்காத விரக்தியில் அவர்கள் சோர்வடைந்துவிட்டதால் போலீஸிலும் புகார் கொடுக்க தயங்கியுள்ளனர். ஹரிஹரன், கைது செய்தபிறகு அவரிடம் ஏமாந்தவர்கள் காவல் நிலையத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். விசாரணை முடிவில் விசித்திர சாமியாரான ஹரிஹரன் குறித்த கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.