தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தியவர்களின் தற்போதைய நிலை!

தேர்தலின் மூலம் மக்கள் பிரதிநிதி தெரிவு செய்யப்படுகின்ற போது ஒரு பெண்ணாக எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பவுலினா சுபோதினி தயாளராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயிற்குடியிருப்பு வட்டாரத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்களுக்கு சமூகத்தில் இருந்த முன்னுரிமை அல்லது வகிபாகம் இன்று மழுங்கடிக்கப்படுகின்றது.

அப்போதெல்லாம் பெண்களை முன்னிலைப்படுத்தியவர்கள் இன்று அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

எமது பிரதேசத்தில் கூட என்னைப்போன்ற பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமைப்படுத்தி செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிலர் தமது சுயநலத்துக்காகவும் குறுகிய அரசியல் சிந்தனையோடும் செயற்படுவது மிகவும் கவலைக்குரியது.

நகரசபையில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும். குறிப்பாக திண்ம கழிவகற்றல் செயற்பாட்டில் உக்கக்கூடிய உக்காத குப்பைகளை அவரவர் வீட்டிலேயே தரம் பிரித்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் நகரத்தை மிகவும் இலகுவாக தூய்மையாக்க முடியும். இவ்வாறான பல வேலைத்திட்டங்களை பெண்களுக்கூடாக கொண்டு செல்கின்ற போது அவை விரைவில் சமூகமயப்படுத்தப்படும்.

இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் பெண்ணுரிமை சார்ந்த செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.