பெயர் மாறும் டெல்லி! அரசாணை வெளியீடு

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு, ஒவ்வொரு மாநில அரசின் சார்பிலும் தனி இல்லங்கள் உள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் டெல்லியில் இரண்டு இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. ஒன்று, கெளடியா மார்க் பகுதியில் உள்ள மூன்றடுக்கு மாடிகள் கொண்ட பழைய தமிழ்நாடு இல்லம். மற்றொன்று, பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள  நான்கடுக்கு மாடிகள் கொண்ட கூடுதல் தமிழ்நாடு விருந்தினர் இல்லம். இவற்றில், தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் தங்குவார்கள். தற்போது இந்த இல்லத்தின் பெயர்களை மாற்றி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், முதன்மை ஆணையர் வேண்டுகோளின்படி, தமிழ்நாடு இல்லங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கெளடியா மார்க் பகுதியில் உள்ள இல்லத்துக்கு,  ‘வைகைத் தமிழ் இல்லம்’ என்றும், பீர் திக்ரன்ஜித் மார்க் பகுதியில் உள்ள  இல்லத்துக்கு, ‘பொதிகைத் தமிழ் இல்லம்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்கும் அதிகாரிகளுக்கு பழைய இல்லம் என்ற உணர்வு ஏற்படுகிறது என்கிற காரணத்தால் பெயரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை ஆணையர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.