இந்திய அளவில் தூய்மை இந்தியா திட்டத்தின் தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டு ஆறாவது இடம் பிடித்த திருச்சி மாநகராட்சியை இந்த ஆண்டு முதலிடத்துக்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் ஒரு வண்ணமயமான முயற்சி சிறந்த பலனளித்துள்ளது.
தற்போது திருச்சியை குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி ஆக்கும் முயற்சியாக மாநகராட்சியில் 700 க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலாக மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் வாகனங்கள் மூலம் குப்பைகளை தினமும் சேகரிப்பதுடன் வாரம் ஒருமுறை மக்காத குப்பைகளை தனியாக சேகரிப்பது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாதிருக்கும் பொருட்டு மாநகராட்சியால் அழகாக வண்ணக் கோலங்கள் வரையப்பட்டுள்ளன.
இதனால் கோலம் போட்ட இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்த விரும்பாத மக்கள் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் நகரின் அழகும் சுத்தமும் பேணப்படுகிறது.
எனவே இந்த முயற்சியினை தொடந்தும் நடைமுறைப்படுத்த மாநகராட்சி சபை தீர்மானித்துள்ளது.