அந்த ஐ.சி.யூ அறைக்குள் வாயில் டியூப், உடம்பெல்லாம் கட்டுகளோடு தீவிர சிகிச்சையில் இருக்கிறார் யூ.கே.ஜி படிக்கும் தன்யஸ்ரீ. அறைக்கு வெளியே பலரின் கண்ணீரும் வேண்டுதல்களும் தொடர, நம்மை ஊடறுக்கிறது இந்தக் காட்சி. குழந்தை தன்யஸ்ரீக்கு என்ன ஆனது? ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த அந்த நிகழ்வு, மனக்கண்ணில் அதிர்வுடன் விரிகிறது.
நீண்ட நாள்கள் கழித்து தமது பேத்தியைப் பார்க்க, அரக்கோணத்திலிருந்து, சென்னை, தண்டையார்பேட்டைக்கு வருகிறார், தாத்தா அருணகிரி. தாத்தாவைப் பார்த்த சந்தோசத்தில் ஓடிப்போய் அவரை ஆரத்தழுவிய தன்யஸ்ரீ, “தாத்தா, வா அப்படியே வாக்கிங் போலாம்” என அழைக்கிறார். பேத்தி சொல்லைத் தட்டாமல் தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் பயணிக்கிறார் அருணகிரி.
“தாத்தா, இப்போ நான் நல்லா திருக்குறள் சொல்ல கத்துக்கிட்டேன். சொல்லவா?” என்றவாறே, ‘அகர முதல எழுத்தெல்லாம்’ குறளை மழலை மொழியில் கொஞ்சுகிறார் தன்யஸ்ரீ. தாத்தாவின் முகத்தில் பெருமிதம். தொடர்ந்து ரைம்ஸ், ஒன்… டூ… த்ரீ எனச் சொல்லிக்கொண்டேபோக, தாத்தா ரசித்தவாறு நடக்கிறார். இரவின் ஒளியில் இரண்டு குழந்தைகள் வாசிக்கும் கவிதையாக நீண்டது அந்தப் பொழுது. அந்த மகிழ்ச்சி சில நொடிகூட நீளவில்லை.
அவர்கள் நடைபயின்ற இடத்தில் உயர்ந்து நின்ற அடுக்கு மாடியிலிருந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு ஒருவர் தன்யஸ்ரீ மீது விழுகிறார். அவ்வளவுதான்… சாலையோடு சாலையாக அமுங்கிப்போகிறார் தன்யஸ்ரீ. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. எச்சில் விழுங்கும் இடைவெளியில் இயல்பு திரும்பிய தாத்தா அருணகிரி, “ஒசரமான மாடியிலிருந்து யாரோ கீழே நடந்துபோய்கிட்டு இருந்த என் பேத்தி மேலே விழுந்துட்டான். பேச்சு மூச்சில்லாம கிடக்குறா. காப்பாத்துங்க” என அடிவயிற்றில் கதறுகிறார்.
பெரியவரின் கதறல் கேட்டு, அந்த வழியாக வந்த இளைஞர்கள் திரண்டு, தன்யஸ்ரீயை மீட்கிறார்கள். அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். விஷயமறிந்து அந்தப் பகுதி மக்கள் திரள்கிறார்கள். கதறி அழுதே மயங்கி விழுந்தனர் தன்யஸ்ரீ பெற்றோர்களான ஸ்ரீதரும் யமுனாதேவியும். தன்யஸ்ரீயின் அத்தை சாந்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசுகிறார்.
“என் சகோதரர் ஸ்ரீதருக்கு ரெண்டு பெண் குழந்தைகள். தண்ணீர் கேன் போடும் வேலை. குறைஞ்ச வருமானம்னாலும் குழந்தைகளை நல்லா படிக்கவெச்சு ஆளாக்கணும்னு ஆசை. குழந்தைகளே எங்க உலகம். அதிலும் குட்டிப் பொண்ணு தன்யஸ்ரீ ரொம்ப துறுதுறு. ‘பெரிய கலெக்டர் ஆவேன். பெரிய டாக்டர் ஆவேன்’னு சொல்லிட்டே இருப்பா. ஆனா, இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்காளே. முதுகெலும்பு உடைஞ்சு, பயங்கர காயத்தோடு கோமாவுல இருக்காளே எங்க தங்கம். பயமாயிருக்குங்க” – மேற்கொண்டு பேச இயலவில்லை அவரால்.
அங்கே திரண்டிருந்த அக்கம்பக்கவாசிகள், “தன்யஶ்ரீ வீட்டுக்கு யாரு போனாலும், ‘வாங்க பாட்டி, சாப்டீங்களா அத்தை, சாப்டீங்களா மாமா’னு அன்பா பேசுவா. சின்ன வயசிலேயே அவ்ளோ மரியாதை. எங்க ஏரியாவின் தங்கம் தன்யஸ்ரீக்கு, அந்த சிவாவால இப்படி ஒரு வினை வந்துடுச்சே” என்று விசும்புகிறார்கள். சில நொடி மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தனர்.
“அந்த சிவாவும் நல்ல பையன்தான். அவன் குடும்பமும் வறுமையில் உள்ள குடும்பம். கஷ்டம் தாங்காமல் தண்ணியை அடிச்சுட்டு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்ய பார்த்திருக்கான். இப்போ, அவனும் இன்னொரு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருக்கான். எல்லாத்துக்கும் இந்த மது போதைதான் காரணம். என்ன பிரச்னைனு சொன்னால், அக்கம்பக்கம் தீர்த்து வெச்சிருப்போமே? அவனோட குடி, இன்னைக்கு இன்னொரு குடியை அழிக்க பாத்துடுச்சே” என்றனர் துயரம் தாளாமல்.
மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் சிவா, ”என்னால் அந்தப் பாப்பாவுக்கு இப்படி ஆச்சே” என புலம்புகிறார். உடலில் ஏற்பட்ட அடியைவிட மனதில் ஏற்பட்ட இந்த வலியை தாங்கமுடியாமல் அழுகிறார்.
தன்யஸ்ரீ கோமா நிலையில் இருக்க, சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவித்துகொண்டிருக்கின்றனர் பெற்றோர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமபிரஷாத் என்பவர், “அக்கம் பக்கத்தினர் கொஞ்சம் பணம் திரட்டி கொடுத்திருக்கோம். ஃபேஸ்புக்ல பதிவுபோட்டதில் கொஞ்சம் உதவி கிடைச்சது. போலீஸ்லேயும் உதவி செய்றாங்க. ஆனாலும், இது போதலை. பாப்பாவுக்குப் பலத்த அடிபட்டிருக்கிறதால, பெரிய மிஷின்கள், பெரிய டாக்டர்களை வெச்சு சிகிச்சை கொடுக்கணுமாம். அந்த மிஷின்களின் வாடைகையே ஒரு நாளைக்கு அம்பதாயிரம் ஆகுமாம். பத்து லட்சத்துக்கும் மேலே செலவாகும்னு சொல்றாங்க. என்ன பண்றதுன்னே தெரியல. எங்களுக்கு எங்க ஏரியா பாப்பா குணமாகித் திரும்பி வரணும்” என்கிறார் வேண்டலும் வேதனையுமான குரலில்.
தன்யஶ்ரீக்கு நேர்ந்த விபரீதம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நாங்கள் இருக்கோம். நல்லபடியா வருவாங்க” என நம்பிக்கை அளித்துள்ளார்.
ஆனாலும், “மது போதையால் நடந்த இந்த விபரீதத்தால், அரசுக்குப் பிரச்னை வந்துடாமல் பார்த்துக்கவும், இதை மீடியா பெருசு பண்ணாலம் தடுக்கவுமே அமைச்சர் சொல்லிட்டு போயிருக்கார்” என்றும் அங்கிருந்தவர்கள் பரவலாகப் பேசிக்கொண்டனர்.
நம் கண்களோ ஐ.சி.யூ-வில் இருந்த தன்யஸ்ரீயைவிட்டு அகலவில்லை. பெற்றோர்கள் நமக்குப் போட்டுக்காட்டிய தன்யஸ்ரீ பிறந்தநாள் வீடியோ காட்சிகள் நம்மை ஏதோ செய்தபடியே இருந்தன. மழலை மொழியும், துறுதுறு சேட்டையுமாக தேவதையின் தேவதையாக வலம்வந்த தன்யஸ்ரீ, அமைதியாகப் படுத்துக்கிடக்கிறார். மீண்டும் எழுந்துவந்து “மாமா நல்லாருக்கீங்களா?” என அன்பொழுக கொஞ்சும் அந்தக் குரலைக் கேட்பதற்காக, தண்டையார்பேட்டைவாசிகள் மட்டுமின்றி, நாமும் காத்திருப்போம்.
தங்கமே தன்யஸ்ரீ… சீக்கிரம் எழுந்து வா!