நீதிபதிகளின் வழக்கு!

வழக்குகளை விசாரிக்க நீதிபதிக்கு ஒதுக்கப்படும் வழக்குகள் பாரபட்சம் காட்டி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளின் பட்டியல் துறைவாரியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பொதுநல வழக்குகள், தேர்தல் பிரச்னைகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், அரசியல் சாசன அந்தஸ்து பெற்ற அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரிக்கும்.

நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வுக்கு தொழிலாளர் விவகாரங்கள், மறைமுக வரி, நிலம் கையகப்படுத்ததல், நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வரும்  வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்விற்கு சட்டம், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பங்குச் சந்தை, ரிசர்வ் வங்கி, மதுபான உரிமம் உள்ளிட்ட பிரிவுகளில் வரும் வழக்குகளை விசாரிக்கும். மேலும் செல்லமேஸ்வரர் தலைமையிலான அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளையும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மதன் லோக்கூர் தலைமையிலான அமர்வுக்கு சுற்று சூழல் துறை, சமூகநீதி, ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட பிரிவுகளில் வரும் வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீதிபதி ஜோசப் குரியன் தலைமையிலான அமர்வு நிலச் சட்டங்கள், வேளாண் துறை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதுடன் மற்ற அமர்வுகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த சுமையை பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் மற்ற அமர்களுக்கும் துறைரீதியிலான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோகாய்,  செல்லமேஸ்வர், மதன் லோக்கூர், ஜோசப் குரியன் ஆகிய 4 பேரும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில் பல்வேறு அமர்வுகளுக்கு துறைவாரியாக ஒதுக்கப்படும் வழக்குகளின் பட்டியலை உச்சநீதிமன்ற இணையத் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பட்டியல் வரும்  5ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.