“சமுதாய அக்கறையுள்ள படங்கள் கொடுப்பது அரசியலில் குதிப்பதற்காக இல்லை!” – அக்ஷய் குமார்

பாலிவுட்டின் மிக முக்கியமான நடிகரான அக்ஷய் குமார், பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பல வருடங்களாகத் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே காட்டிக்கொண்டவர், கடந்த சில வருடங்களாக நல்ல கதையம்சம் கொண்ட, சமூக அக்கறை கொண்ட படங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். ‘ஏர்லிஃப்ட்’, ‘ரஸ்டம்’, ‘ஜாலி LLB 2’, ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’, ‘பேட்மேன்’ போன்ற சமுதாய அக்கறையுள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வியாபார நோக்கம் கொண்ட படங்களை முடிந்த அளவு தவிர்த்து வருகிறார். இதில் நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘ரஸ்டம்’ படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இப்படி அக்ஷய் குமார் மாறியிருப்பதற்குக் காரணம் அரசியல் ஆசையோ எனப் பேசி கொள்கின்றனர். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, தனக்கு அரசியலில் குதிக்கும் ஆசை எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

“சமூக அக்கறை கொண்ட படங்களைக் கொடுப்பதால், நான் அரசியலுக்கு வர முயல்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு நடிகனாக, இந்த வகை படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவ்வளவுதான்!” என்ற விளக்கத்தையும் முன்வைத்துள்ளார். இவர் நடிப்பில் ‘பேட்மேன்’ மற்றும் ‘2.0’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.