நாம் தமிழர் சீமானும் ச.ம.க சரத்குமாரும் கூட்டாகச் சேர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரைக்கு வந்த சீமானும் சரத்குமாரும் இன்று மதுரை விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். ”கட்சி அரசியலைத் தாண்டி எதார்த்தமான சந்திப்பு இது, வருங்காலத்தில் இது போன்று நிறைய சந்திப்புகளை ஏற்படுத்துவோம்” என்று அறிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, ”மருத்துவம், கல்வியைத் தனியார்மயமாக்கிவிட்டு, படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துக் கட்டணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவக் காப்பீடு ரூபாய் 5 லட்சம் என்பது நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இந்திய நாட்டில் 50 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிட்டு, குடிமக்களிடம் ஆதார் அட்டை கேட்பது நியாயமற்ற செயல். மேலும், பாதுகாப்பு விஷயங்களில் அந்நிய முதலீடு என்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே முடியும். கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான வரி விகிதம் மூன்றிலிருந்து நான்கு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தற்போது பா.ஜ.க பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை 2019-க்குள் செயல்படுத்த முடியுமா. இந்தப் பட்ஜெட் சாமானியர்களுக்கு எதையும் தரவில்லை. மீன்வளத்துறைக்குத் தனி அமைச்சகம் தேவை. வடமாநிலங்களில் பா.ஜ.க, மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி என்பது வெற்று அறிவிப்புதான். விவசாயிகளுக்கு இதுவரை எதுவும் செய்யாத பா.ஜ.க, இனி ஒன்றரை ஆண்டுகளில் செய்துவிடுமா” என்று இருவரும் ஒரே குரலில் பேசினார்கள்.