தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியைப் பெற, சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் முக்கிய பங்கு வகித்தனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில், சுழற்பந்துவீச்சுமூலம் ரன்களைக் கட்டுப்படுத்தி, டர்பனில் முதல் வெற்றிபெற இருவரும் உதவினர்.

போட்டிகுறித்துப் பேசிய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ’’தென்னாப்பிரிக்காவில் நான் விளையாடுவது இது முதல்முறை என்பதால், மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இங்கு, ஆடுகளத்தின் தன்மை மற்றும் பந்து சுழலும் தன்மை ஆகியவை காரணமாக, எப்படிப் பந்து வீசுவது என்று குழப்பம் ஏற்பட்டது. இதை தோனியிடம் தெரிவித்தபோது, எப்படி பந்துவீசுவது, சீதோஷ்ண நிலைகுறித்து நிறையவே ஆலோசனைகள் கொடுத்தார். அவரின் அறிவுரை, விக்கெட் வீழ்த்துவதை எளிதாக்கியது. சுழற்பந்துவீச்சாளர்களின் பணியில், 50 சதவிகிதத்தை தோனியே முடித்துவிடுவார். மேலும், பேட்ஸ்மேன்களை தோனி எளிதில் கணித்துவிடுவார். அதேபோல கேப்டன் கோலியும் என் திறமைகளைப் புரிந்துகொண்டு, என் வேலைகளை எளிதாக்குகிறார். நமக்கு, இரண்டு ஆளுமைகள் கிடைத்துள்ளன. ஒருவர், அணியை வழிநடத்துகிறார். மற்றொருவர் அணியை முன்னிலைப்படுத்துகிறார்’’ என்றார். அந்தப் போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.