சரத்குமாரோட அரசியல் எனக்குப் பிடிக்கலை; இயக்குநர் ஏ.வெங்கடேஷ்

`பகவதி’, ‘ஏய்’, `சாணக்யா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது சரத்குமாரை வைத்து ‘பாம்பன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். கட்டுமஸ்தான உடற்கட்டு, பாம்புத் தோற்றம் என முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலில் சரத்குமார் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள, இயக்குநரைத் தொடர்புகொண்டோம்.

“நான் இதற்கு முன்னால் இயக்கிய படங்களின் ஷூட்டிங்கின்போது, பாம்பு மனிதனாகவும் மனிதன் பாம்பாகவும் மாறியதாக எனக்கு வந்த செய்திகள் எனக்குள்ளே தொந்தரவு பண்ணிக்கொண்டே இருந்துச்சு. அதைப்பத்தி தெரிஞ்சுக்கணும்னு நிறைய தேட ஆரம்பிச்சேன். அப்போதான், புராணங்கள்ல இந்த விஷயம் இருப்பதும், ‘தெய்வத்தின் குரல்’ங்கிற ஒரு புத்தகத்துல ஒருத்தருக்குப் பாம்புக் குழந்தையா பிறந்த மாதிரியான தகவல்களும் இருந்துச்சு. இதைப்பத்தி நானும் ரெண்டு வருடமா தகவல்கள், செய்திகள், படங்களையெல்லாம் பாத்தேன்.

பாம்பன்

இந்தியில ‘நாகின்’னு ஒரு படம் நல்ல ஹிட் அடிச்சது. அதே படத்தைத் தமிழ்ல ‘நீயா’ என்ற பெயர்ல ரீமேக் பண்ணாங்க. அந்தப் படத்துல இச்சாதாரி பாம்புனு ஒரு விஷயத்தைச் சொல்லிருப்பாங்க. அதுவும் புராணங்கள்ல சொல்லிருக்காங்க. அந்தச் செய்தி எனக்கு ஆர்வத்தைத் தூண்டுச்சு. புராணங்களிலும் இருக்கு, சில படத்துலேயும் இந்த விஷயத்தைப் பதிவு செஞ்சுருக்காங்க, அதை இன்னும் மெருகேத்திச் சொன்னா, பார்க்குறவங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சு கதை எழுத ஆரம்பிச்சேன். அந்தக் கதைக்கு ஒரு ஆக்‌ஷன் ஹீரோ தேவைப்பட்டுச்சு. ஆரம்பத்துல இருந்தே நான் சரத் சார்கூட டிராவல் பண்றதுனால அவர்தான் சரியா இருப்பார்னு தோணுச்சு. அவர்கிட்ட கதையைச் சொன்னவுடனே, ‘கதை நல்லாயிருக்கு. கண்டிப்பா பண்ணலாம். உடம்பைத் தயார் பண்ணிட்டுச் சொல்றேன்’னு சொன்னார். ஒரு மாசத்துக்கு முன்னாடி ஷூட் போலாம்னு அவர்கிட்ட இருந்து க்ரீன் சிக்னல் வந்துச்சு. உடனே, போட்டோ ஷூட் பண்ணியாச்சு. இந்த மாசத்துல ஷூட்டிங் போறோம்” என்றார்.

பாம்பன்

`ரொம்ப வருஷமா சரத்குமாரும் நீங்களும் ஒண்ணா பயணிக்கிறீங்க. அவருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி?” என்றதற்கு, “நான் ‘சூரியன்’ படத்துல அசிஸ்டென்ட்டா இருக்கும்போது, எந்தக் கிராமத்துல ஷூட்டிங் நடந்தாலும், அங்க உடம்பு சரியில்லாவதங்களுக்கு மாத்திரை மருந்து ஏற்பாடு பண்ணித்தருவார் சரத்குமார். அவருக்கு அப்போதிருந்தே சமூக அக்கறை இருந்துச்சு. அதுதான் அவரை அரசியலுக்குக் கூட்டிக்கிட்டு வந்துச்சுனு நினைக்கிறேன். பெர்சனலா சொல்லணும்னா, எனக்கு அவர் அரசியலுக்குப் போனது பிடிக்கலை. எங்களுக்கு ‘நடிகர் சரத்குமார்’தான் பிடிச்சிருக்குனு அவர்கிட்ட சொல்வேன், சிரிப்பார். அவர் ஹீரோ ஆனதிலிருந்து இப்போவரைக்கும் தன்னை ஒரு ‘இயக்குநருக்கான நடிகரா’ எங்ககிட்ட கொடுத்திடுவார். அது அவரோட ஸ்பெஷல்” என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்தில், சரத் சாருக்கு ஜோடி இல்லை. ஆனா, இன்னொரு ஜோடி இருக்கு. ஒரு பையன் புதுமுகம், அவனுக்கு ஜோடியா நடிக்க லட்சுமிமேனன், வேதிகா இவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கோம். கஞ்சா கருப்பு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோட்டா ஶ்ரீனிவாசராவ், வின்சென்ட் அசோகன், சாய் ரவி, இளவரசு, சீதா, ரித்விகானு நிறைய பேர் நடிக்கிறாங்க. படத்துல சிஜி வொர்க்ஸ் நிறைய பண்ண வேண்டியிருக்கு. அதனால, ரங்கராஜ்னு ஒருத்தர் தலைமையில ஒரு புது டீம் வொர்க் பண்றாங்க.  படத்தை மே அல்லது ஜூன்ல ரிலீஸ் பண்ணலாம்னு பிளான்” என்றபடி விடைபெற்றார்.