கர்நாடகாவில், தொண்டர் ஒருவர் எம்.எல்.ஏ., மீது பணத்தைத் தூவி வரவேற்ற வீடியோ காட்சிகள், தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
கர்நாடக மாநிலம் பிதார் தொகுதி எம்.எல்.ஏ, அசோக் கெனி. தொழிலதிபரான இவர், கர்நாடக மக்காலா பாக்ஷா கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். நேற்று, அவர் தனது தொகுதியில் ‘தலித் ஜன ஜகிருதி’ என்ற பெயரில் பேரணி ஒன்றை நடத்தினார். அப்போது, தொண்டர் ஒருவர் எம்.எல்.ஏ., அசோக் கெனி மீது 100 ரூபாய் பணத்தாள்களைத் தூவி வரவேற்றார். இதனால், அவரைச் சுற்றி இருந்த தொண்டர்கள் உற்சாகமடையவே, பணத்தை மீண்டும் தூவினர்.
மேலும், ஆட்டம்பாட்டத்துடன் எம்.எல்.ஏ-வை சிறப்பாக வரவேற்றனர். இதனிடையே, வீசப்பட்ட 100 ரூபாய் தாள்களை எடுக்க கூட்டத்தில் பலர் முண்டியடித்தனர். இதில், சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகளைப் பதிவுசெய்தவர்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள், தற்போது வைரலாகப் பரவிவருகிறது. பலரும் இந்தச் செயலுக்கு கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றனர்.