நண்பன் தற்கொலை…. ஊரையே நடுநடுங்க வைத்த நண்பர்கள்!

இந்திய மாநிலமான தமிழகத்தில் விழுப்புர மாவட்டத்தில் நண்பன் தற்கொலை செய்து கொண்டதால் 20-க்கும் மேற்பட்ட நண்பர்கள் கிராமத்துக்குள் புகுந்து 15 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கியும், 30 வீடுகளை சூறையாடியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). ஓட்டுநரான இவர் அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தேவனூர் கிராமம் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோவும், டிராக்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ஆனந்தாயி (32) என்பவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது டிராக்டர் ஓட்டுநர் மணிகண்டனிடம் இருந்து மருத்துவ செலவுக்காக ரூ.4500-ஐ அங்கிருந்தவர்கள் வாங்கிய பின்னர் அவரது முதலாளியிடமும் சென்று பணம் கேட்டுள்ளனர்.

25 ஆயிரம் கேட்ட ஆனந்தாயியின் உறவினர்களுக்கு டிராக்டர் உரிமையாளர் செல்வராஜ் 5 மட்டும் கொடுத்துவிட்டு மீதம் பின்பு தருவதாக கூறி அனுப்பியுள்ளார்.

அதன்பின்பு மணிகண்டனிடம் உனக்கு எனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று சத்தம் போட்டுள்ளார். இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்ட மணிகண்டன் தனது நண்பர்களான சீனிவாசன், விஜயகுமார் ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஆனந்தாயியின் உறவினரிடம் எதற்காக பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்கிறீர்கள் என்று தகராறு செய்துள்ளதை அவதானித்த நபர் ஒருவர் விஜயகுமார் தந்தை ராமலிங்கத்திடம் மகன் இவ்வாறு தகராறு செய்கிறான் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ராமலிங்கம் தனது மகன் விஜயகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த விஜயகுமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து விஜயகுமாரின் நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் அக்கிராமத்திற்கு நுழைந்து 15 மோட்டார் சைக்கிள், 30 வீடுகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து விஜயகுமாரின் நண்பர்கள் சிலரை கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய சிலரையும் தேடி வருகின்றனர். இதனால் இரு கிராமமும் பதற்றத்துடன் காணப்படுவதுடன், பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.