இலங்கையின் 70 வது சுதந்திர தினம் இன்று, கொழும்பு காலிமுகத்திடலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வில் இடம்பெறவிருந்த மடிக்கணினி நடன (லப்டொப் டான்ஸ்) நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவிகள் மடிக்கணினிகளுடன், நடன நிகழ்வு ஒன்றுக்கு தயாராகி வந்தனர். காலிமுகத்திடலில் ஒத்திகைகளிலும் பங்கேற்றிருந்தனர்.
எனினும், நேற்று நடந்த ஒத்திகையின் போது, நடனமாடிய மாணவிகளின் கைகளில் மடிக்கணினிகள் இருக்கவில்லை.
இது குறித்து நடன ஆசிரியை கருத்து வெளியிடுகையில், மடிக்கணினிகளை நீக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் மடிக்கணினிகள் இல்லாமல் நடனம் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மலையகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றுகையில், இன்றைய சுதந்திர தின நிகழ்வில் இடம்பெறவிருந்த மடிக்கணினி நடனம் (லப்டொப் டான்ஸ்) குறித்து விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.