சற்றுமுன் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான சுதந்திர தின கொண்டாட்டம்!!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் கொழும்பு காலி முகத்திடலில் தற்சமயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்வில், உள்நாட்டு, வெளிநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் கொழும்பில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தினர் சார்பில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இளைய புதல்வரான இளவரசர் எட்வேர்ட் மற்றும் மனைவி இளவரசி சோபி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை வடக்கு கிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.