அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை ஒழித்து பரிசுத்தமான அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கம்: சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி

இன்றைய 70ஆவது சுதந்திர தினத்தில் நாம் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் 70 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய 70ஆவது சுதந்திர தினத்தில் நாம் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்க வேண்டும்.

நாட்டைப் பிரிக்க முயன்ற விடுதலைப் புலிகளால் நாம் 26 வருடங்களாக யுத்தம் செய்தோம். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

இவற்றிலிருந்து மீண்ட நாம் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள வேண்டும். வறுமையை போக்க வேண்டும்

ஊழல், மோசடி, களவு என்பவற்றை ஒழிக்க வேண்டும். அதற்காக நாம் உண்மையாகவும், தைரியமாகவும், தூய்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை ஒழித்து பரிசுத்தமான அரசியலை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

நாட்டு மக்கள் இன, மொழி, மத பேதமின்றி சுதந்திரத்துடனும் பயமின்றியும் வாழ வேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.

அனைவருக்கும் பயன்தரும் ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதே எமது இலக்கு. இந்த இலக்கை அடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சகலரும் என்னுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றார்.